கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நாளை காலை 10 மணிக்கு முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நாளை காலை 10 மணிக்கு முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவிருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தமிழகம் கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது. தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிக அளவில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வைத்துவரும் நிலையில் பிசிஆர் சோதனை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு நாளைக்கு 7,500 சோதனை என்கிற அளவுக்கு தமிழகம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  அதிலும் குறிப்பாக சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவின் பல மாநிலங்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.

சென்னையில் பல மண்டலங்களில் அதிக அளவில் நோய்த்தொற்று உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஆராய மத்திய குழு சென்னை வந்தது. ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள் குழு சென்னை வந்துள்ளது. இந்தக் குழு சென்னையில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்தது. சென்னையில் பல்வேறு இடங்களுக்கு இக்குழு சென்றது. கோயம்பேடு மார்க்கெட், தொற்று அதிகம் உள்ள மண்டலங்களில் உள்ள பகுதிகள், மருத்துவமனைகளில் குழு ஆய்வு செய்தது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள காப்பகங்களிலும் ஆய்வு நடத்தியது.

சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவினருடனும் ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் கொரோனா தடுப்பு குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நாளை காலை 10 மணிக்கு முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவிருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: