அம்பத்தூரில் துணிகரம் செல்போன் கடையை உடைத்து கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.   அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே அத்திப்பட்டு, செல்லியம்மன் நகர் ராகவேந்திரா தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (38). இவர், அம்பத்தூர் -அயனம்பாக்கம் சாலை, ஐ.சி.எப் காலனியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். ஊரடங்கு உத்தரவு காரணமாக இவரது கடை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது கடை பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிர்ச்சியடைந்த அவர் கடைக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த விலை உயர்ந்த 5 செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் சுரேஷ் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: