விவசாயிகளின் பயன்பாட்டு கட்டணத்தை அரசே ஏற்கும்; வியாபாரிகளின் 1% சந்தை கட்டணம் மேலும் ஒரு மாதம் ரத்து...முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊடரங்கு அமல்  படுத்தப்பட்டது. தமிழகத்திலும் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் லாரி, வேன் உள்பட வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால்,  விவசாய பொருட்கள் விளைநிலங்களிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாய அமைப்புகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை  வைத்தது. இதை தொடர்ந்து, விவசாயிகள் தங்களது விளைபொருட்களை குடோன்களில் வைக்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும்,  வியாபாரிகளுக்கான சந்தை கட்டணத்தை ரத்து செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு அத்தியவாசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திடும் வகையில், விளைபொருட்களை  விவசாயிகள் விற்பனை செய்யும் போது வியாபாரிகளிடம் இருந்து விற்பனை மதிப்பில் வசூலிக்கப்பட்டு வந்த 1 சதவீத சந்தை கட்டணத்தை, தற்போதைய  சூழலை கருத்தில் கொண்டு வரும் 30ம் தேதி வரை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் கிடைத்தும், விவசாயிகள்  காய்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைக்க அமைக்கப்பட்டுள்ள குடோன்களுக்கு 30 நாட்களுக்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதற்கான  கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. கொரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது.  இதனை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், வியாபாரிகளின் சந்தை  கட்டணம் ரத்து மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, வரும் ஏப்ரல் 30-ம் தேதி முடியவிருந்த  கட்டணம் ரத்து மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விளைபொருளுக்காக வியாபாரிகள் செலுத்தும் 1 % சந்தை கட்டணம் ரத்து ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், பொருளீட்டுக்கடனுக்கான 5% வட்டியையும்  மேலும் ஒரு மாதம் செலுத்த தேவையில்லை என்றும் முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டண  தொகையை அரசே ஏற்கும் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார்.

Related Stories: