முழு ஊரடங்கின் போது நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் வழக்கம் போல் செயல்படலாம்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் தலைமையில் கடந்த 24ம் தேதி ஆய்வு செய்யப்பட்டது.  கிராமப்புரங்களில் நோய் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதிலும், நகரப்புரங்களில், குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் நோய் தொற்று  தொடர்ந்து பரவி வருகிறது.  சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிக அளவில் இந்த நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால்,  இது குறித்து மருத்துவ மற்றும் பொதுசுகாதார வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டதில், நகர்ப்புறங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கினால் மட்டுமே, இந்த நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

எனவே, சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த  அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் 29ம் தேதி   புதன்கிழமை இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படவுள்ளது. இக்காலகட்டத்தில் பத்திரிகைகள்  மற்றும்  ஊடகங்கள் வழக்கம்போல் செயல்படலாம். மாநகரத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். தடையை யாரேனும் மீறினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: