மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு நிறுத்தம் மனிதாபிமானமற்றது புல்லட் ரயில் திட்டத்தை நிறுத்துங்கள்: ராகுல் கடும் கண்டனம்

புதுடெல்லி: ‘‘மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்திய மத்திய அரசின் செயல் உணர்வுப்பூர்வமற்ற மனிதாபிமானமற்ற செயல்’’ என ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை வரை 4 சதவீத அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில், காங்கிரஸ்முன்னாள்  தலைவர் ராகுல் நேற்று தனது ஆன்லைன் செய்தியாளர்கள் பேட்டியில் கூறியதாவது:  மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் கொரோனா வைரசுக்கு எதிராக சேவை செய்து வரும் ராணுவ வீரர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது உணர்ச்சிப்பூர்வமற்ற மனிதாபிமானமற்ற செயல்.

இதற்கு பதிலாக லட்சக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படும் புல்லட் ரயில் திட்டம் மற்றும் மத்திய அரசின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் திட்டம் போன்றவற்றை ரத்து செய்யலாம் என கூறினார். காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்துவதற்கு பதிலாக தனது தேவையில்லாத செலவுகளை மத்திய அரசு குறைத்துக் கொள்ளலாம். புதிய நாடாளுமன்ற கட்டிட பணியை நிறுத்தினாலே 20,000 கோடி மிச்சமாகும். அதோடு புல்லட் ரயில் திட்டத்தை நிறுத்தினால் ரூ.1.10 லட்சம் கோடி கிடைக்கும். தனியார் துறையினர் ஊழியர்களின் மாத சம்பளத்தை குறைக்கக் கூடாது என ஒருபுறம் கூறும் அரசு மறுபுறம் இதுபோன்ற தவறான முன்னுதாரணத்தை தந்து வருகிறது’’ என்றார்.

Related Stories: