அமெரிக்க கப்பல்களை மறித்தால் ஈரான் படகை சுட்டு வீழ்த்தலாம்: டிரம்ப் அதிரடி உத்தரவு

வாஷிங்டன்: ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு சோதனைகளால் அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால், அதையும் மீறி ஈரான் தொடர்ந்து ரகசியமாக சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் அந்நாடு செயற்கைக்கோள் ஒன்ைறயும், தன்னுடைய சொந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. ஈரானின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி பாரசீக வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 6 கப்பல்களை ஈரான் கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

சிறிய படகுகளில் வந்த கடற்படையினர், கப்பல்களை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இத்தகவல் அமெரிக்க அதிபருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் ஈரான் கடற்படை படகுகளை சுட்டு வீழ்த்த கடற்படைக்கு அதிகாரம் அளித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதை டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஈரான் கடற்படை படகுகளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தும்பட்சத்தில், இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் பெரிய அளவில் பிரச்னை வெடிக்க வாய்ப்புள்ளது. இதனால், பாரசீக வளைகுடா பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: