உளுந்தூர்பேட்டையில் விளையாட்டால் விபரீதம் போலீசுக்கு பயந்து ஓடியபோது மாணவன் தவறி விழுந்து சாவு

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஊரடங்கு நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏரிகள் மற்றும் மைதானங்களில் விளையாடி வருகின்றனர். இதுபோல் விளையாடுபவர்கள் போலீசார் கண்களில் படாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி மாடல்காலனி பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் மகன் இளந்தமிழன் (15). அரசு மாதிரிப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 4 நாட்களுக்கு முன்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வீட்டருகே விளையாடி கொண்டிருந்த இளந்தமிழன் உள்ளிட்டோர் பயந்துபோய் ஓடியுள்ளனர். இதில் இளந்தமிழன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளான்.

அன்று முதல் கடந்த 3 நாட்களாக கால் நடக்க முடியவில்லை எனக்கூறி சிகிச்சை பெற்று வந்துள்ளான். நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சு வலிப்பதாக தனது பெற்றோரிடம் இளந்தமிழன் கூறியுள்ளான். உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில், கீழே விழுந்ததில் நெஞ்சில் கல்குத்தியதில் இதயத்தில் ரத்தக்கட்டி ஏற்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இளந்தமிழன் உயிரிழந்தான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: