கொரோனா நிவாரண நிதி யார் அதிகம் கொடுத்தது? குடிபோதையில் நடந்த மோதலில் விஜய் ரசிகர் அடித்துக்கொலை: மரக்காணத்தில் பயங்கரம்

மரக்காணம்: கொரோனா நிவாரண நிதி யார் அதிகம் கொடுத்தது என்ற வாக்குவாதத்தில் விஜய் ரசிகரை கொலை செய்த ரஜினி ரசிகரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் யுவராஜ் (22). கூலித்தொழிலாளி. இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் ஆறுமுகம். சமையல் தொழிலாளி. இவரது மகன் தினேஷ்பாபு (22). இவர் ரஜினி ரசிகர். இவர்கள் இருவரும் நண்பர்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாக, டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று மதியம் எங்கோ மது வாங்கி யுவராஜூம், தினேஷ்பாபுவும் குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளனர். அப்போது கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு அதிகம் பணம் கொடுத்தது, ரஜினியா, விஜயா என்று அவர்களுக்குள் விவாதம் எழுந்தது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரமடைந்த தினேஷ்பாபு, யுவராஜை கையால் பலமாக தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த மரக்காணம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி, தினேஷ்பாபுவை கைது செய்தனர். நடிகர்கள் ரஜினி, விஜய் ஆகியோர் கொரோனா நிவாரண நிதிக்கு எவ்வளவு கொடுத்தனர் என்ற வாக்குவாதத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: