கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்பவர்களுக்கு கபசுர குடிநீர் பொட்டலம் வழங்க முடிவு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம்  குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர்  பொட்டலங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் அரசால் நியமிக்கப்பட்ட 19 டாக்டர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அண்டை மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஆயுர்வேதம் மற்றும் சித்தா மருந்துகளும் பயன்படுத்தப்படுவதை டாக்டர்கள் சுட்டிக் காட்டினர். இதை தற்போது தமிழக அரசும் ஏற்றுக் கொண்டு, தமிழகத்தில் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய ஆயுஷ் அமைச்சகம் கோவிட்-19 தொற்று நோயினை தடுப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியது. அதில் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு வழிகாட்டுதலை வழங்கியது.  

அதன்படி, முதல்வரின் உத்தரவின்பேரில் 11 மருத்துவ வல்லுநர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள `ஆரோக்கியம்’’ என்ற சிறப்பு திட்டம் மூலம் வழிமுறைகளை வெளியிட பரிந்துரைகளை வழங்கினார்கள்.  முதல்வரும் நேற்று ஆரோக்கியம் என்ற சிறப்பு திட்டத்தினை தொடங்கி வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கும் உடல் நலம் பேணுவதற்கும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுரக் குடிநீர் சூரண பொட்டலங்களை வழங்கினார்.  

இதைத்தொடர்ந்து சென்னை மாநகரில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் சூரண பொட்டலங்கள் வழங்கப்படும். இந்த விநியோகத்திலும் சம்பந்தப்பட்ட அலுவலர்களும் பயனாளிகளும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு திட்டத்தின் வழிமுறைகள், கொரோனா நோய்க்கான சிகிச்சை அல்ல எனவும், பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவ ரீதியாக ஆய்வு செய்யப்பட்ட வழிமுறைகள் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: