வேலூர் உட்பட 5 மாவட்டங்களில் கிளைச்சிறைகள் நிரம்பியதால் பார்ஸ்டல் பள்ளியில் கைதிகள் அடைப்பு: முக்கிய வழக்குகளில் மட்டும் கைது செய்ய உத்தரவு

வேலூர்: தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, கைதிகளை பார்க்க வரும் உறவினர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில், சிறையில் உள்ள கைதிகளின் அதிக எண்ணிக்கையை குறைக்கவும் அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து சிறைகளில், சிறிய வழக்குகளில் சிக்கி தண்டனை அனுபவிப்பவர்களை, நீதிமன்றங்கள் மூலம், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க அரசு, உத்தரவிட்டது. மேலும் பல்வேறு வழக்குகளில் கைதாகும் கைதிகளை கிளைச்சிறைகளில் அடைக்கவும் உத்தரவிட்டது. தற்போது கிளைச்சிறைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால், வேலூர் பார்ஸ்டல் சிறையில் கைதிகளை நேற்று முன்தினம் முதல் அடைத்து வருகின்றனர்.

இதுகுறித்து வேலூர் மத்திய  சிறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து அதிகளவில் கைதிகள் வருவார்கள். அந்தந்த மாவட்டங்களில் உள்ள கிளைச்சிறைகளில் புதிய கைதிகளை அடைத்து கொள்ள உத்தரவிட்டது.இந்த கிளை சிறைகளும் நிரம்பி விட்டதால் வேலூர் மத்திய சிறை அருகே உள்ள சிறுவர்களுக்கான பார்ஸ்டல் சிறையில் நேற்று முன்தினம் முதல் கைதிகளை அடைத்து வருகிறோம். அதேபோல் இனிவரும் காலங்களில் முக்கிய வழக்கில் மட்டும் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: