ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதியில் மீண்டும் காட்டு யானை அட்டகாசம் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது

கூடலூர்: ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதியில் புகுந்த காட்டு யானை வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதி ஏச்சம் வயல் கிராமம். இங்கு நேற்று இரவு 11 மணியளவில் வந்த ஒற்றை யானை, விவசாயி ரவீந்திரன் என்பவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது வீட்டினுள் ரவீந்திரன், அவரது மனைவி, குழந்தைகள் இருந்தனர். வீட்டின் பின்புற சுவரை யானை உடைக்கும் சத்தம் கேட்டதும் ரவீந்திரன் தனது மனைவி, குழந்தைகளுடன் முன் வாசல் வழியாக வெளியேறி அருகில் உள்ள வீடு ஒன்றில் தஞ்சம் அடைந்தார். வீட்டின் மற்றொரு பகுதியையும் தந்தத்தால் குத்தி சேதப்படுத்திய யானை அதனுள் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை இழுத்து சாப்பிட்டு சென்றுள்ளது. இதில் வீடு பலத்த சேதம் அடைந்தது. அப்பகுதியில் உள்ள கிருஷ்ணன் செட்டி என்ற விவசாயி தனது வீட்டின் முன் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளையும் யானை சாப்பிட்டும், சேதப்படுத்தியும் சென்றது.

சம்பவம் அறிந்து கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்றனர். அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார்  சங்கீதா ராணி, டி.எஸ்பி. ஜெய்சிங், கார்குடி வனச்சரகர் சிவகுமார், ஸ்ரீ மதுரை ஊராட்சி தலைவர்  சுனில் ஆகியோர் பாதிப்புகளை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.  முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள இக்கிராமத்தில் தொடர்ந்து காட்டு யானைகள் புகுந்து வீடுகளை உடைத்து சேதப்படுத்துகின்றன. புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் விவசாயிகளின் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கொன்று தின்கின்றன. யானை உள்ளிட்ட வனவிலங்குகளும் ஊருக்குள் வருகின்றன.

கிராம எல்லையில் வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள அகழிகளை ஆழப்படுத்தி மின் வேலி அமைத்து விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், யானையால் சேதப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு உரிய இழப்பீடு அல்லது அரசு திட்டத்தில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு திட்டத்தில் இலவச வீடு கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாகவும், வன எல்லையை ஒட்டியுள்ள அகழியை அகலப்படுத்தி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் வனத்துறையினரும் உறுதி அளித்தனர்.

Related Stories: