பயணிகள் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி; மே 4-க்கு பின் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டது. ஆனாலும், கொரோனா நோய் தொற்று  அதிகரித்ததை தொடர்ந்து வருகிற மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தில்  மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்றார்.

அதேநேரம், விவசாயம் சார்ந்த தொழில்கள், குறு, சிறு தொழில்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட சில பணிகளுக்கு மட்டும்  தளர்வு அறிவிக்கப்பட்டு, அவைகள் 20ம் தேதி (நேற்று) முதல் செயல்படலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. மேலும், மாநில அரசுகள்  தங்கள் பகுதியில் எந்தெந்த நிறுவனங்களுக்கு தளர்வு அளிக்கலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், தமிழகத்தில் கடந்த  சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால், மே 3ம் தேதி வரை இதே நிலை நீடிக்கும்  என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு முடியுள்ள மே 3-ம் தேதிக்கு பின் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய  நடைமுறைகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. கழகம் வெளியிட்ட அறிக்கையில்,

* வரும் மே 4-ம் தேதி முதல் மாநகர போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வரவேண்டும்.

* மணிக்கு ஒருமுறை தங்களது கைகளை சோப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* அரசுப் பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அனுமதிக்க கூடாது.

* பஸ்களை இயக்கும்போது, காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறி இருந்தால் அந்த ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பணியில் இருப்பவர் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

* ஆரோக்கிய சேது எனப்படும் செல்போன் ஆப் டவுன்லோட் செய்யப்படவேண்டும்.

* சமூக இடைவெளியை பராமரித்து பயணிகள் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

Related Stories: