சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு நிவாரண பொருட்களுக்காக மக்கள் தள்ளு, முள்ளு: அமைச்சரின் தொகுதியில் அலட்சியம்

பெங்களூரு: கர்நாடக அமைச்சரின் தொகுதியில் கொரோனா பாதிப்பை கருத்தில்  கொள்ளாமல் நிவாரண பொருட்கள் வாங்க சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு  ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி தள்ளு, முள்ளு ஏற்பட்ட சம்பவம் ஹொசபேட்டையில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகாவிலும் இந்த பாதிப்பால் 14  பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹொசபேட்டை புறநகரில்  உள்ள காரிகனூரு பகுதி 23வது வார்டு அரசு பள்ளி வளாகத்தில் வனத்துறை  அமைச்சர் ஆனந்த்சிங் பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை  வழங்குவது தொடர்பாக தகவல் கிடைத்த பொதுமக்கள் கொரோனா தொற்றையும், அதன் தாக்கத்தையும் கண்டு கொள்ளாமல் ஆயிரக்கணக்கில் ஒரே இடத்தில் கூடினர்.

சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட அவர்கள் வரிசையில் ஒருவருடன் ஒருவர் நெருக்கமாக நின்று தள்ளு முள்ளிலும் ஈடுபட்டனர்.   இதை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ் அதிகாரிகளும் கண்டு  கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. 11 பேருக்கு கொரோனா பாதிப்பு  ஏற்பட்டுள்ள எஸ்.ஆர்.நகரிலும் இதே நிலை இருந்தது. அந்த  நகரின் சாலையில்  கிலோமீட்டர் கணக்கில் ஏழை மக்கள் நிவாரண பொருட்களுக்காக காத்திருந்தனர்.  ரெட்ஜோனாக அறிவிக்கப்பட்ட பகுதியிலேயே இந்த அலட்சியம் ஏன் என்ற கேள்வி சமூக  ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய  அமைச்சரின் தொகுதியிலேயே இந்த நிலையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: