கொரோனா பெருசா? பொருளாதாரம் பெருசா?... பிரேசில் சுகாதார அமைச்சர் பதவி பறிப்பு: அதிபர் அதிரடி நடவடிக்கை

பிரேசிலியா: கொரோனா பெருசா? பொருளாதாரம் பெருசா? என்ற கருத்து மோதலில், பிரேசில் சுகாதார அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் இதுவரை 29,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையில் பிரேசில் அதிபர் ஜெர் போல்சனாரோவுக்கும், சுகாதார அமைச்சர் லூயிஸ் ஹென்ரிச் மெண்டெட்டாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வந்தன.

நாட்டில் கொரோனா நெருக்கடியின் மத்தியில், பிரேசில் அதிபர் ஜெர் போல்சனாரோ, சுகாதார அமைச்சர் லூயிஸ் ஹென்ரிச் மெண்டெட்டாவை அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளார். இதுகுறித்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதார அமைச்சர் லூயிஸ் ஹென்ரிச் மெண்டெட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், ‘சுகாதார அமைச்சரான என்னை பதவியில் இருந்து அதிபர் ஜெர் போல்சனாரோ நீக்கியதாக கேள்விபட்டேன். எனக்கு அமைச்சர் வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு நன்றி கூறுகிறேன். எனது இடத்தில் மற்றொரு சிறந்த நபரை பதவியில் அமர்த்தலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் லூயிஸ் ஹென்ரிச் மெண்டெட்டா, பிரேசிலில் சமூக தனிமைப்படுத்தலை ஆதரித்தார். ஆனால், அதிபர் ஜெர் போல்சனாரோ, பிரேசிலின் பொருளாதாரம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இழந்த உயிர்களை விட முக்கியமானது என்று கூறிவந்தார். இதுதொடர்பாக, லூயிஸ் ஹென்ரிச், அதிபர் ஜெர் போல்சனாரோவை சமூக தளத்தில் விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: