30 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியக்கூடிய ரேபிட் டெஸ்ட் கிட்; முதற்கட்டமாக 24,000 கருவிகள் தமிழகம் வந்தது...சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று இருக்கிறதா என கண்டறிய தமிழகம் முழுவதும் 12 அரசு மருத்துவமனைகள் மற்றும் 7 தனியார் மருத்துவமனைகள் என  மொத்தம் 19 இடங்களில் கொரோனா பரிசோதனை கூடங்கள் மட்டுமே உள்ளது. இந்த பரிசோதனை மையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 700 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால், பரிசோதனை முடிவுகள் வருவதற்கு கால  தாமதமாகிறது. இதனால் நோய் தொற்றுள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஆகிறது.

எனவே, கொரோனா நோய் தொற்றுள்ளவர்களை 30 நிமிடத்தில் கண்டறியக்கூடிய ரேபிட் டெஸ்ட் கிட்டை சீனாவிடம் இருந்து வாங்க தமிழக அரசு முடிவு செய்தது. தற்போது அவசர தேவை என்பதால் டெண்டர் விட்டு வாங்க காலதாமதம்  ஆகும் என்பதால், அவசர பணிக்கு எனக்கூறி சீனாவிடம் 4 லட்சம் கிட் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 50 ஆயிரம் கிட் தமிழகம் வருவதாக கூறப்பட்டது. ஆனால், தமிழகத்திற்கு ஆர்டர் செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட்  கிட்டுகள் வேறு நாட்டிற்கு சீனா அனுப்பிவிட்டதாகவும், இதனால் தான் தொடர்ந்து கால தாமதம் ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில், கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ளும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. முதற்கட்டமாக 24,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்துள்ளது. இன்று கருவிகள் வந்துள்ளதால், நாளை முதல்,  ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் விரைவில் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டு குணப்படுத்த ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 37 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள், 33 லட்சம் பிசிஆர் கருவிகள் மத்திய அரசு சார்பில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட 6.50 லட்சம் ரேபிட்  டெஸ்ட் கருவிகள் நேற்று டெல்லி வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: