காஞ்சிபுரம் பெருநகராட்சி 6 மண்டலங்களாக பிரிப்பு: வாரத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பெருநகராட்சி 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, வாரத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் பெருநகராட்சியின் 51 வார்டுகளில், கொரோன பாதிப்புகள் கண்டறியப்பட்ட 22, 24, 25, 28, 29, 32, 33, 34, 36 ஆகிய வார்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீதமுள்ள 42 வார்டுகளும் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 42 வார்டுகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அவசரத் தேவைகளுக்காக பொதுமக்கள் சென்றுவர தலா வார்டுகளிலும் தற்காலிக வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள மளிகைக் கடைகள், மருத்துவமனைகள், இறைச்சிக் கடைகள், பால், தண்ணீர் கேன் கடைகள், ஏடிஎம் ஆகியவற்றுக்கு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் சென்று வர இளஞ்சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, ஆரஞ்சு ஆகிய 5 நிற அட்டைகள் தயாரிக்கப்பட்டு, ஒரு குடும்பத்திற்கு தலா ஒரு அட்டை வீதம் வழங்கப்பட உள்ளது.அட்டையில் குறிப்பிட்ட கிழமைகள் தவிர பிற நாட்களில் வீட்டைவிட்டு வெளியில் செல்ல அனுமதி இல்லை. பொதுமக்கள் தங்களது மண்டல பகுதியில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் பொதுமக்கள் மருத்துவ சேவை போன்ற மிக முக்கியமான, இன்றியமையாத தேவைகளுக்கு அட்டையில் தெரிவிக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்களை தொடர்பு கொண்டால் உடனடியாக நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மூலம் செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: