நாகையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நகராட்சி வாகனங்களில் செல்லும் தூய்மை பணியாளர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

நாகை: நாகையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் தூய்மை பணியாளர்களை நாகை நகராட்சி வாகனங்களில் ஏற்றிச்செல்வது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனோ வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் நுழையாமல் இருக்க குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளிகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனோ வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாகை நகராட்சி சமூக இடைவெளிகளை பின்பற்றாமல் தூய்மை பணியாளர்களை வாகனத்தில் ஏற்றிச்செல்வதால் அரசின் உத்தரவை அமல்படுத்த வேண்டிய நகராட்சி நிர்வாகமே இப்படி அலட்சிய போக்கை கடைபிடிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

தூய்மை பணியாளர்களை சமூக இடைவெளி இல்லாமல் வாகனத்தில் ஏற்றிச்செல்வது முறையானது இல்லை. இந்த வாகனத்தில் ஏறி செல்லும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று தூய்மை பணிகளை மேற்கொள்வார்கள். அப்படியிருக்கும் போது யாராவது ஒரு நபருக்கு கொரோனோ வைரஸ் தொற்று பரவினால் அது மற்ற பணியாளர்களையும் பாதிக்கும். அதன் மூலம் சமூக தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.அரசின் உத்தரவை செயல்படுத்துவதில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகளே இப்படி செயல்பட்டால் பொதுமக்களை எப்படி அரசின் உத்தரவுகளை கடைபிடிக்கும்படி உத்தரவு போட முடியும். எனவே இனிவரும் காலங்களில் தூய்மை பணியாளர்களை வாகனங்களில் அழைத்து செல்லும் போது சமூக இடைவெளி விட்டு அழைத்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

Related Stories: