கலக்குது கேரளாவின் இடுக்கி தொற்று இல்லா மாவட்டமானது

மூணாறு: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஏப். 2ல் இங்கிலாந்தை சேர்ந்த நபர், காங்கிரஸ் கட்சி பிரமுகர் உள்ளிட்ட 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில், இங்கிலாந்தை சேர்ந்தவருக்கு ஹெச்ஐவி மருந்து செலுத்தியதன் மூலம், அவர் குணமடைந்து நாடு திரும்பினார்.  செருதோணியைச் சேர்ந்த பிரபல காங்கிரஸ் பிரமுகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவருடன் தொடர்பில் இருந்த சுருளி பகுதியைச் சேர்ந்த நபர் மற்றும் அவரது மனைவி, தாய், மகன், பைசன்வாலி பகுதியைச் சேர்ந்த ஆசிரியை, அவரது மகன், டெல்லிக்கு சென்று வந்த தொடுபுழாவைச் சேர்ந்த நபர் உள்பட 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தனர். இதனால், மாவட்டத்தில் பீதி ஏற்பட்டது.

இந்நிலையில், மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று பாதித்தவர்கள் பயணம் செய்த இடங்கள், அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்தினர். அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பால் இடுக்கி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்த 10 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். கேரளாவில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களில் இடுக்கி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மூணாறில் வரும் நாட்களில் கண்காணிப்பு அதிகரிக்கும் என மாவட்ட கலெக்டர் தினேஷன் அறிவித்துள்ளார்.

Related Stories: