100-க்கும் மேற்பட்ட குரூப்கள் அழிப்பு; வாட்ஸ் அப்பில் கொரோனா பற்றி தவறாக பகிர்ந்தவர்களை பிடித்து சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

சென்னை: சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 209-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும், கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 796 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார  அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 9,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 308 பேர் உயிரிழந்த நிலையில், 857 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாளை வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், மேலும், ஊரடங்கு நீட்டிக்க பல்வேறு மாநிலங்கள்  மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தனிச்சையாக ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ளனர். ஊரடங்கு நீட்டிப்பதா? அல்லது புதிய செயல்  திட்டத்தை அமல்படுத்துவதா? என்பது குறித்து மத்திய அரசு இன்று அல்லது நாளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பலர் பலி, இந்த பகுதியில் கொரோனா பாதிப்பு, பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு ஜூலை வரை விடுமுறை, அரசு வங்கி கணக்கில் பணம் செலுத்துகிறது. பிரதமர் மோடி அடுத்தது  இதனை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார் என பல்லேறு வதந்திகள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதனையடுத்து, வாட்ஸ் அப்பில் கொரோனா பற்றி தவறான பதிவுகளை பகிர்ந்த 85 பேரை பிடித்து சைபர் கிரைம் பிரிவு போலீஸ் எச்சரித்துள்ளது. மேலும், கொரோனா குறித்து வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பும் நபர்களை சைபர் கிரைம் பிரிவு  போலீஸ் கண்காணித்து வருவதாகவும், தவறான தகவல்களை பரப்பிய 100-க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குரூப்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories: