வீட்டு பொருட்களை மரத்தில் கட்டிவிட்டு முகாமில் தங்கியிருக்கும் நாடோடி மக்கள்

பெ. நா. பாளையம்: கோவை துடியலூரில் பல பகுதிகளில் நாடோடி குடும்பங்கள் தங்கியுள்ளனர். இவர்கள் பூம் பூம் மாடு வைத்து பிச்சை எடுப்பது, தங்களை தாங்களேசாட்டையால் அடித்துக் கொண்டும் சாமிபடங்களை வைத்தும், ஜோதிடம் பார்த்தும் பணம் சம்பாதித்து வருகின்றனர்.  இவர்கள் ஒடிசா, ஆந்திரா போன்ற வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் வந்தவர்கள் . பகல் நேரங்களில் தொழிலுக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் இங்குள்ள வார சந்தை, மாநகராட்சி வணிக வளாகங்கள் பகுதியில் உள்ள காலி இடங்களில் குடும்பத்துடன் தங்கி வந்தனர்.

 இந்நிலையில், கொரோனா நோய் பரவல் காரணமாக 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. ஆரம்ப நாட்களில் துடியலூர் சந்தை பகுதியில் தங்கி இருந்த இவர்களை மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு கருதி முகாம் பகுதிகளுக்கு அழைத்து சென்றனர். அப்போது வீட்டு பொருட்களான கட்டில், தண்ணீர் குடங்கள், துணிகள் ஆகியவற்றை உடன் எடுத்து செல்ல வழி இல்லாததால் சந்தை பகுதியில் உள்ள பூவரசம், புளியம், வேப்பமரங்களின் மேல் பகுதியில் உள்ள கிளைகளில் கட்டி வைத்து சென்றுள்ளனர். இந்த பொருட்களை வேறு எங்கும் வைக்க வசதி இல்லாததால் இந்த முறையை கையாண்டு பாதுகாத்துள்ளனர். நாடோடி மக்களின் இந்த செயல் அப்பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: