கொரோனா பாதிப்பு எதிரொலியால் பதிவுத்துறைக்கு 700 கோடி வருவாய் ‘அவுட்’: 2019-20ம் நிதியாண்டில் 1,700 கோடி பற்றாக்குறை ,.. பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும்  30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு சராசரியாக 8 ஆயிரம் கோடி வரை வருவாய் ஈட்டப்படுகிறது. இந்த நிலையில் வருவாயை பெருக்கும் வகையில் புதிய வழிகாட்டி மதிப்பு கடந்த 2012ல் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழிகாட்டி மதிப்பில் உள்ள குளறுபடியால் 8 ஆயிரம் கோடி வருவாய் எட்டுவதே சிரமமான காரியமாக இருந்தது. இதை தொடர்ந்து கடந்த 2017ல் வழிகாட்டி மதிப்பு 30% குறைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2018 முதல் ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவு திட்டம் அமலுக்கு வந்தது.

அதன்பிறகு பத்திரப்பதிவுக்கு வரும் ஆவணங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் மூலம் கடந்த 2018-19ல் 11 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு எட்டப்பட்டது. இதைதொடர்ந்து நடப்பாண்டில் 13,123 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த இலக்கை அடைவதில் ஆரம்பம் முதலே பதிவுத்துறை தடுமாறி வந்தது. குறிப்பாக, ஆன்லைன் பத்திரப்பதிவில் குளறுபடியை உடனுக்குடன் சரி செய்வதில் தாமதம், நிலுவையில் உள்ள ஆவணங்களை திருப்பி அனுப்புவதில் சிக்கல், அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவு பதிவு நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வருவாய் குறைந்தது. இதனால், இந்தாண்டு வருவாய் இலக்கை அடையுமா என்று ஆரம்பம் முதலே சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், கடந்த மார்ச் இரண்டாவது வாரத்திற்கு பிறகு கொரோனா பீதியால் பத்திரப்பதிவு நாளுக்கு நாள் குறைந்தது. ஒரு சிலர்  மட்டுமே பத்திரபதிவுக்கு வந்தனர். இந்த நிலையில் கடந்த 24ம் தேதிக்கு பிறகு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த 2019-2020ம் நிதியாண்டில் இலக்கு நிர்ணயித்ததில் 90 சதவீதம் மட்டுமே பதிவுத்துறையால் எட்ட முடிந்தது. குறிப்பாக, 13,123 கோடியில் 11,500 கோடி மட்டுமே இலக்கு அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நடப்பாண்டியில் 1,723 கோடி வரை வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த 13 நாட்களாக சார்பதிவாளர் அலுவலகங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதாலும், கடந்த மார்ச் முதல் வாரத்திற்கு பிறகு கொரோனாவால் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு குறைந்ததாலும், 700 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: