ஊரடங்கு நேரத்தில் மனிதநேயம் உரிமையாளர் இல்லாமல் செயல்படும் பேக்கரி கடை: பணத்தை பெட்டியில் போட்டு விட்டு பிரட்டுகளை எடுத்து செல்லலாம்

பாபநாசம்: ஊரடங்கு நேரத்தில் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் மக்கள் வசதிக்காக பாபநாசத்தில் ஆள் இல்லாத பேக்கரியை அதன் உரிமையாளர் திறந்து உள்ளார். இங்கு பணத்தை பெட்டியில் போட்டு விட்டு பொருட்களை எடுத்து செல்லலாம்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவனை எதிரில் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் பேக்கரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக தனது வாடிக்கையாளர்கள், பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவதிப்படக் கூடாது என்ற உணர்வு உரிமையாளர் சீனிவாசனுக்கு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து வாடிக்கையாளர்களின் நலன் கருதி, பேக்கரி வாசலில் ஆளில்லா கடையை திறந்து வைத்தார். பிரட், ரஸ்க் உள்ளிட்டவற்றை வைத்து விட்டு, அருகில் பணப் பெட்டியையும் வைத்து விட்டார்.

வாடிக்கையாளர்கள் பொருட்களின் விலை விபரத்தை தெரிந்து கொண்டு அதற்குரிய பணத்தை பெட்டியில் போட்டு விடுமாறு பேப்பரில் டைப் அடித்து வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒட்டி உள்ளார். இதைப் படித்துப் பார்க்கும் வாடிக்கையாளர்கள் பணத்தை போட்டு விட்டு தங்களுக்கு தேவையானப் பொருட்களை எடுத்து செல்கின்றனர்.இது குறித்து சீனிவாசன் கூறுகையில், இந்த இக்கட்டான நிலையிலும் மக்களின் நேர்மை என்னை நெகிழ வைக்கிறது. தினமும் நான் வைக்கின்ற பொருட்களுக்கான பணம் சரியாக பெட்டியில் சேர்கிறது என்றார்.

Related Stories: