தற்போதைய சூழலிலும் பணியில் 90% ஊழியர்கள்; இன்றிரவு ஒளியேற்றும் நிகழ்வு குறித்து பயப்பட வேண்டாம்...அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3374 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே,  பிரதமர் மோடி ஏற்கனவே 2 முறை டிவி.யில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கடந்த மாதம் 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு பின்பற்ற வலியுறுத்தினார். அதற்கு 2 நாட்கள் கழித்து 24ம் தேதி 2வது முறை உரையாற்றும் போது, 21 நாட்கள்  ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு வீடியோ ஒன்றை சமூக இணையதளத்தில் அவர் வெளியிட்டார்.

அதில், வரும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) இரவு 9 மணிக்கு  வீட்டின் அனைத்து மின்சார விளக்குகளையும் 9 நிமிடங்கள் அணைத்து விட்டு, வீட்டின் வாசல் அல்லது பால்கனியில் நின்று மெழுகுவர்த்தி அல்லது விளக்கு அல்லது செல்போன்  டார்ச் ஆகியவற்றை ஒளிரச் செய்ய வேண்டும். அவ்வாறு ஒளிரச் செய்யும்போது, ‘சூப்பர் பவர்’ பிரகாசம் ஏற்படும். அது, நாம் தனியாக இல்லை, அனைவரும் கொரானாவுக்கு எதிராக ஒட்டு மொத்த தீர்மானத்துடன் போராடுகிறோம் என்பதை  உணர்த்தும் என்றார்.

இந்நிலையில், இரவு 9 மணிக்கு தீபம் ஏற்றுவது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் தற்போதைய ஊரடங்கு காலத்திலும் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு  வருகிறது. ஊரடங்கு உத்தரவால் 5,000 மெகாவாட் மின்சாரத் தேவை குறைந்துள்ளது. தற்போதைய சூழலிலும் மின்சார வாரிய ஊழியர்கள் 90 சதவீதம் பேர் பணிக்கு வருகின்றனர். இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணைத்துவிட்டு,  தீபம் ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். வீடுகளில் மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதுமானது. மின் சாதனங்களுக்கு பழுது ஏற்பட்டு விடுமோ என மக்கள் அச்சப்பட தேவையில்லை. மருத்துவமனைகளில்  மின்விளக்குகள் அணைக்கப்படாது என்றார்.

மேலும், வீடுகளில் மின் விளக்குகளை அணைத்தாலும், பிற மின் சாதனங்கள் இயங்கலாம். இன்றிரவு 9.09 மணிக்கு ஒளியேற்றும் நிகழ்வு முடிந்த பின்னர் யாரும் பயப்பட வேண்டாம். மின்விளக்குகளை அணைத்துவிட்டு 9.10க்கு வோல்டேஜ்  அதிகமாகி பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின் கட்டணத்தை குறைப்பது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.  

இரவு 9 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்படுவதால் தொழில் நுட்ப ரீதியில் சவால் தான் என்றும் 15 நிமிடத்தில் 9 நிமிடம் மின் தேவையில் மாறுபாடு இருப்பதால் சவாலான நிலை. மின் அணைப்பு நிகழ்வு சவாலான பணியென்றாலும்  சாத்தியமானது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: