புதுவை ஜிப்மர் டாக்டர், நர்சுகளுக்காக 10,000 கொரோனா பாதுகாப்பு உடை: திருப்பூரில் தயாரிப்பு பணி தீவிரம்

திருப்பூர்: கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஊழியர்களுக்கான பிரத்யேகமான பாதுகாப்பு உடைகள் தற்போது திருப்பூரில் வேகமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோய் தாக்குதல் காரணமாக பின்னலாடை தயாரிக்கும் முக்கிய நகரமான திருப்பூரில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அதன் ஒரு பகுதியாக தற்போது கொரோனா வார்டில் பிரத்யேகமான பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் பணிகளும் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக திருப்பூருக்கு 10 ஆயிரம் உடைகள் தயாரிக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆர்டர் தந்துள்ளது.

மேலும் மருத்துவத்துறையில் சொல்லப்படும் பி.பி.இ. கிட் எனப்படும் முழு உடலுக்கான பிரத்யேக பாதுகாப்பு உடையை தயாரிக்க தேவையான நான் ஓவன் பொருளை திருப்பூருக்கு அளித்துள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்காக பிரத்யேக அனுமதி பெற்று கொரோனா பாதுகாப்பு உடை தயாரிக்கும் பணியில் பல்வேறு பனியன் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் லோகநாதன் கூறுகையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை பிரத்யேக பாதுகாப்பு உடை தயாரிக்கும் ஆர்டரை எங்களுக்கு வழங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக உடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

தற்போது மருத்துவ உலகிற்கு அவசரமாக இந்த உடைகள் தேவைப்படுவதால், 10 ஆயிரம் உடைகள் கேட்டுள்ளனர். வழக்கமான ஆடை தயாரிப்பு போன்றுதான் இந்த பணியும். ஆனால் வழங்கப்பட்டிருக்கும் நான் ஓவன் மெட்டீரியல், இயந்திரத்தில் வெட்டும்போது எளிதில் சூடாகிவிடும். இதனால் அவை எளிதில் ஒட்டிக்கொள்ளும். இயந்திரத்தில் வெட்டும்போது மிகுந்த கவனத்துடன் வெட்ட வேண்டி உள்ளது. தைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், தைக்கும் வளாகம் என அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரம் பேணப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ஆயிரம் உடைகள் தைத்து கொண்டிருக்கிறோம். 10 நாட்களில் இந்த ஆர்டரை முடித்துவிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: