மேட்டுப்பாளையத்தில் காய்கறி மண்டிகள் மூடல் கால்நடைக்கு உணவாகும் ஊட்டி கேரட்கள்: விவசாயிகள் வேதனை

ஊட்டி:   கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு  உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள்  கொண்டு செல்ல எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் நீலகிரியில்  இருந்து கொண்டு செல்லப்படும் காய்கறிகளை மொத்தமாக வாங்கி விற்பனை  செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மேட்டுபாளையம் மண்டிகள்  இயங்கின. விவசாயிகள் பலரும் தங்கள் தோட்டங்களில் விளைந்த கேரட் உள்ளிட்ட  காய்கறிகளை அறுவடை செய்து மண்டிகளுக்கு அனுப்பி வைந்தனர். இந்நிலையில்  டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய  மேட்டுபாளையத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  அவர்கள் வசித்த பகுதிகள் சுமார் 5 கி.மீ. சுற்றளவிற்கு மூடப்பட்டுள்ளன.  வாகனங்கள் உள்ளே நுழையவும், வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால்  அங்குள்ள காய்கறி மண்டிகள் அனைத்தும் வரும் 14ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.  மண்டிகள் திறந்திருக்கும் என்ற நம்பிக்கையில் ஊட்டி அருகேயுள்ள கேத்தி  பாலாடா, கொல்லிமலை, செலவிப்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள்  பலரும் முன்கூட்டியே கேரட் பயிர்களை அறுவடை செய்தனர். இந்த சூழலில்  மேட்டுபாளையத்தில் மண்டிகள் மூடப்பட்டுள்ளதால், அறுவடை செய்யப்பட்ட  கேரட்களை விற்பனைக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கேரட்கள் வீணாகி அழுக துவங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் அவற்றை  சாலையோரங்களில் குவியல் குவியலாக கொட்டி வைத்துள்ளனர். இவை கால்நடைகளுக்கு  உணவாகி வருகின்றன. கேரட்டிற்கு நல்ல விலை கிடைத்து வர கூடிய நிலையில்,  கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அவற்றை விற்பனைக்கு அனுப்ப முடியாததால்  பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது அறுவடையை  எதிர்நோக்கியுள்ள விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: