1000 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும்; நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மின் விளக்குகளை அணையுங்க....தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள்

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஏற்கனவே 2 முறை டிவி.யில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கடந்த மாதம் 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு பின்பற்ற வலியுறுத்தினார்.  அதற்கு 2 நாட்கள் கழித்து 24ம் தேதி 2வது முறை உரையாற்றும் போது, 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று காலை 9 மணிக்கு வீடியோ ஒன்றை சமூக இணையதளத்தில் அவர் வெளியிட்டார்.  அதில்,பிரதமர் மோடி 11 நிமிடங்கள் உரையாற்றினார். உரையில் அவர் கூறியதாவது: முடக்க காலத்தில் மக்கள் வீட்டுக்குள் இருந்து சமூக விலகல் என்ற லட்சுமண் ரேகையை தாண்டக் கூடாது.

வீட்டில் மக்கள் தனிமையாக உணரலாம். ஆனால், நாட்டு மக்கள் 130 கோடி பேரின் ஒட்டு மொத்த பலமும், நம் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது என்பதை உணர வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை ( நாளை) இரவு 9 மணிக்கு   வீட்டின் அனைத்து மின்சார விளக்குகளையும் 9 நிமிடங்கள் அணைத்து விட்டு, வீட்டின் வாசல்  அல்லது பால்கனியில் நின்று மெழுகுவர்த்தி அல்லது விளக்கு அல்லது செல்போன் டார்ச் ஆகியவற்றை ஒளிரச் செய்ய வேண்டும். அவ்வாறு  ஒளிரச் செய்யும்போது, ‘சூப்பர் பவர்’ பிரகாசம் ஏற்படும். அது, நாம் தனியாக இல்லை, அனைவரும் கொரானாவுக்கு எதிராக ஒட்டு மொத்த தீர்மானத்துடன் போராடுகிறோம் என்பதை உணர்த்தும்.

முடக்கத்தால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கொரோனா என்ற இருளில் இருந்து வெளியேறி, நம்பிக்கை என்ற வெளிச்சத்துக்கு செல்ல மக்கள் உதவ வேண்டும். நாம் வெளிச்சத்தையும், நம்பிக்கையையும் நோக்கி  முன்னேற வேண்டும். மக்கள் தாய் நாட்டை பற்றியும், 130 கோடி மக்களை பற்றியும், அவர்களின் ஒட்டுமொத்த தீர்மானத்தை பற்றியும் சிந்திக்க வேண்டும். இது, இந்த இக்கட்டான சூழலில் போராடுவதற்கான வலிமையை, நம்பிக்கையையும்  தரும்.  நமது உற்சாகத்தை விட மிகப் பெரிய சக்தி எதுவும் இல்லை. முடக்க காலத்தில் சேவை மனப்பான்மையுடன் மக்கள் பின்பற்றிய ஒழுக்கம் இதற்கு முன் நடந்ததில்லை. கொரோனாவுக்கு எதிராக போராடியவர்களுக்கு கடந்த மார்ச் 22ம்  தேதி மக்கள் கைத்தட்டி காட்டிய நன்றி, பல நாடுகள் பின்பற்ற உதாரணமாக அமைந்தது. ஒட்டு மொத்த பலத்தை நாடு உணர இது உதவியது என்றார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று விட்டில் நாளை விளக்கு ஏற்ற பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நாளை இரவு 9 மணி முதல் 9:09 மணி வரை மின்  விளக்குகளை மட்டும் அணையுங்கள் என பொதுமக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்னை ஏற்படும். எனவே  அனைத்து மின் ஊழியர்களும் தவறாமல் பணியில் இருக்க வேண்டும். 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories: