கொரோனா நோய் தடுப்பு, நிவாரண பணிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கு துணை நிற்போம்: திமுக மாவட்ட செயலாளர், எம்பி, எம்எல்ஏக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: கொரோனா நோய் தடுப்பு, நிவாரண பணிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் துணை நின்று களப்பணியாற்றுவோம் என்று திமுக மாவட்ட செயலாளர், எம்பி, எம்எல்ஏக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மற்ற எல்லாவற்றையும் விட, மக்களைப் பாதுகாக்கும் பணியே தலையாய பணி என்று எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக சார்பில், ஆங்காங்கே உள்ளாட்சி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் ஆக்கபூர்வமான பணிகளை தினமும் கவனித்து வரும் நான், அந்தச் சீரிய முயற்சிகளை மனமுவந்து பாராட்டுகிறேன். மக்களிடத்தில் இது அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதையும் நான் அறிவேன்.

ஆகவே, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து நம் மக்களைப் பாதுகாக்கும் பணியில் தொடர் நடவடிக்கையாக-திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளில் மேலும் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டிட வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன். மாவட்ட செயலாளர்கள் கவனத்திற்கு, ஏப்ரல் 3ம் தேதியன்று(நேற்று) துவங்கி- ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா கொடுந்தொற்று நோய் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவருடன் கலந்து ஆலோசனை செய்திட வேண்டும். அந்தச் சந்திப்பின் போது மாவட்டத்தில் உள்ள நிலவரம், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், கிளினிக்குகள் போன்றவற்றில் உள்ள சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள், தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள், கிருமி நாசினிகள் கையிருப்பு போன்றவை குறித்துக் கேட்டறிதல் வேண்டும்.

இறுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்து, மாவட்ட நிர்வாகம் மேலும் எடுத்துவரும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு திமுகவின் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும். கொரோனா நோய்த் தொற்று நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை, மாவட்ட ஆட்சித் தலைவரை தவறாமல் சந்தித்து, மாவட்டத்தில் நிலவும் கொரோனா நோய்த் தொற்று குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கவனத்திற்கு, ஏப்ரல் 3 முதல் ஒவ்வொரு திமுக எம்பி, எம்எல்ஏக்களும்; அவரவர் தொகுதிகளில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், பொது விநியோக கடைகள், காவல் சோதனைச் சாவடிகள் ஆகிய முக்கியமான இடங்களை நேரில் சென்று பார்வையிட வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சூழல், கையுறைகள், கிருமி நாசினிகள் மற்றும் சோப்புகள் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் போதுமானதாக இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். அங்கன்வாடி மையத்தில் பொருட்கள் பற்றாக்குறை இல்லாமல் வழங்கப்படுகிறதா, போதிய கையிருப்பு இருக்கிறதா என விசாரித்து அறிய வேண்டும். பொது விநியோக மையங்களில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு உள்ளதா என்பது குறித்தும், முதியோருக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று பொருட்கள் டெலிவரி செய்யப்படுகிறதா என்றும் விசாரித்தறிதல் வேண்டும். பொது இடங்கள், காவல் துறைசோதனைச் சாவடிகள் ஆகிய இடங்களில் மக்களை, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், ஊரடங்கு மற்றும் சமூக விலகலின் முக்கியத்துவத்தை விளக்கிச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவல்துறையினருக்கும், பொது ஊழியர்களுக்கும் முகமூடிகள் மற்றும் கையுறைகளை வழங்கிட வேண்டும்.

மக்கள் பணியே; நம் பணி என்ற அடிப்படையில்-மாவட்ட செயலாளர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்திற்கு உற்ற துணையாக நின்று, ஆங்காங்கே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், காவல்துறை சோதனைச்சாவடிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு களப்பணியாற்றிட வேண்டும். மேலும், கள ஆய்விற்குச் செல்லும் போது ஊரடங்கு உத்தரவுக்குக் கட்டுப்பட்டு 5 பேருடன் மட்டுமே செல்ல வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிந்து, வரையறுக்கப்பட்டுள்ள சமூக விலக்கை கடைப்பிடிக்க வேண்டும். ஆய்வின் போது மக்கள் கூட்டம் கூடுவதையோ, மக்களை கூட்டமாக அழைத்துச் செல்வதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். கொரோனா காலத்திலும் மக்களோடு மக்களாக இருப்போம்! தனித்திருப்போம்! விழித்திருப்போம்! கொரோனாவை வெல்வோம்! இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: