21 நாள் முடக்கத்தை திட்டமிடாமல் அமல்படுத்தியதால் வெளிமாநில தொழிலாளர் பாதிப்பு: செயற்குழு கூட்டத்தில் சோனியா குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் செயற்குழு கூட்டம், காணொளி காட்சி மூலம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இதர மூத்த தலைவர்கள் பங்கேற்று, முடக்க நிலை நிலவரம் குறித்து ஆலோசித்தனர். இந்த கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது: கொரானா படுமோசமான கஷ்டங்களை ஏற்படுத்தி விட்டது. இந்த சிக்கலான நேரத்தில் நாம் ஒன்றிணைந்து ஆதரவு அளிக்க வேண்டும். இந்த 21 நாள் முடக்கம் தேவையானதாக இருக்கலாம். ஆனால், திட்டமிடாமல் இது அமல்படுத்தப்பட்டதால், நாடு முழுவதும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு குழப்பத்தையும், கஷ்டத்தையும் ஏற்படுத்தி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தின் முடிவில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் செயற்குழு தெரிவித்த ஆலோசனைகள்: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய, பல நாடுகளில் பின்பற்றுவதுபோல், பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும். ஏழை மக்களின் வாழ்வாதார பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார வளர்ச்சி மீண்டும் ஏற்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோதுமை உட்பட இதர ராபி பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1 மாதத்துக்குள் குறுகிய கால திட்டம், 3 மாதங்களுக்கு நீண்டகால திட்டம் ஆகியவற்றை பரிந்துரைக்க பொருளாதார நிபுணர்கள் அடங்கிய சிறப்புக்குழுவை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது. பொருளாதார சீரழிவுகளை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்க வேண்டும் என ராகுல் கேட்டுக் கொண்டார்.

Related Stories: