கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளை மிரட்டி வரும் நிலையில் 'கொரோனா'என்ற வார்த்தையையே உச்சரித்தால் கைது: துர்க்மேனிஸ்தான் நாட்டில் அதிரடி

அஷ்கபத்: கொரோனா வைரஸின் தாக்குதலுக்கு உலக முழுவதும் இதுவரை 9.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலால் உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளனர். உலகம் முழுவதும் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது. உலகையே கொரோனா வைரஸ் ஆட்டுவித்து வரும் நிலையில்,அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகளும் இதற்குத் தப்பவில்லை. எனினும், துர்மேனிஸ்தான், மத்திய பசுபிக் கடலில் உள்ள குட்டி குட்டி தீவு நாடுகளில் கொரோனா பாதிப்பு அறவே இல்லை.

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான துர்க்மேனிஸ்தானில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட இல்லை. இதனால், கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அந்த வார்த்தையை பயன்படுத்தினால் கைது நடவடிக்கை பாயும் என்று அந்நாடு அறிவித்து இருக்கிறது. மேலும், ஊடகங்கள், பத்திரிகைகள் உள்ளிட்டவையும் கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் சாலைகளில் அல்லது வேறு பகுதிகளில் முகக்கவசம் அணிந்து யாராவது சென்றால் அவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

துர்மேனிஸ்தானின் அண்டை நாடான ஈரானில், கொரோனா தாக்கம் அதிகரித்து இருக்கும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.அதிபர் குர்பங்குலி பெர்டிமுகாம்தோவ் அரசாங்கம் சர்வாதிக்கத்தை இதன் மூலம் வலுப்படுத்துகிறது என்று குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்படுகின்றன. ஊடக சுதந்திர தரவரிசையில் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் துர்மேனிஸ்தான் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசி இடத்தில் வடகொரியா இருக்கிறது.

Related Stories: