இலங்கை வரலாற்றில் முதல்முறையாக கப்பலில் கடத்தப்பட்ட ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: தீவிர விசாரணையில் கடற்படை

கொழும்பு: இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், போதைப் பொருட்களின் புழக்கமும், பயன்பாடும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போர் காலத்தில் இலங்கைப் படையினரும், விடுதலைப் புலிகளும் தரையிலும் கடலிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அதனால், போதைப் பொருட்களை கடத்துவதும், இடம் மாற்றுவதும் கஷ்டமாக இருந்தது. ஆனால், போருக்கு பின்னர் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைந்து விட்டன. இதனால், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், தங்களது காரியங்களை இலகுவாக முடித்துவிடுகின்றனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் போதைப்பொருள் விற்பனை அதிகம் என்றும் இந்தியாவிலிருந்து கடல் வழியாக வட மாகாணத்துக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன என்று குற்றம்சாட்டப்பட்டது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கஞ்சாவை விடவும், இந்தியாவிலிருந்து கடத்தப்படும் கஞ்சாவுக்கு விலை அதிகமாகும். இலங்கை கஞ்சாவை விடவும், இந்திய கஞ்சாவில் போதையும் அதிகம் உள்ளது.அதனால், இலங்கை கஞ்சா ஒரு கிலோ 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்படுகிறது. அதேவேளை, ஒரு கிலோ இந்தியக் கஞ்சா, 01 லட்சத்து 10 ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையில் தற்போது கஞ்சா உற்பத்தி வெகுவாகக் குறைந்து விட்டது என்றும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இன்று இலங்கை வரலாற்றில் முதல்முறையாக கடல்வழியாக இலங்கைக்கு கப்பலில் கடத்தப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. மேலும், போதைப் பொருட்களை கடத்தியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த 9 பேரை கைது செய்து இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை  வரலாற்றில் அதிக போதைப்பொருள் பிடிப்பட்டது பொதுமக்கள் மற்றும் காவல்துறை மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: