ஆயுஷ் துறை பரிந்துரை செய்தும் தமிழக அரசு கபசுர குடிநீர் வழங்க மறுப்பது ஏன்?: சித்த மருத்துவர்கள் கேள்வி

சென்னை: ஆயுஷ் துறை பரிந்துரை செய்தும் தமிழக அரசு கபசுரகுடிநீரை பொதுமக்கள், நோயாளிகளுக்கு கொடுக்க மறுப்பது ஏன் என்று சித்த மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவியதையடுத்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து சித்த மருத்துவர்கள் கூறியதாவது: தமிழக மக்கள், கொரோனா வைரஸ் குறித்து பயப்பட தேவையில்லை. ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் துணையோடு இந்த வைரஸின் பாதிப்பிலிருந்து மக்கள் எளிதாக பாதுகாத்துக் கொள்ளலாம். இதையடுத்து நுரையீரலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் வகையில் ஆடாதொடை இலைகள், சிற்றரத்தை, அதிமதுரம் தேவையான அளவு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை கசாயம் தயாரிக்க குடிக்கலாம். மேலும் கொரானோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

தமிழகத்தில் இதுவரை 29 பேர் கொரானோ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா வைரசுக்கு தற்போது அனைத்து சித்த மருத்துவர்கள் மற்றும் ஆயுஷ் துறை நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடாதொடை மணப்பாகு போன்ற மூன்று மருந்துகளை பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த கபசுர குடிநீரில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க கூடிய மூலிகைகளான ஆடாதொடை, அக்ரகாரம், கற்பூரவல்லி, திப்பிலி, சீந்தில், கோரைக்கிழங்கு, சிறுதேக்கு, கோஷ்டம், நிலவேம்பு, கடுக்காய் தோல், இலவங்கம், முள்ளி, வட்டத்திருப்பி, சுக்கு, சிறுகாஞ்சொறி போன்ற 15 வகை அரிய மூலிகைகளைக் கொண்டு சித்த மருத்துவ முறைப்படி கபசுர குடிநீர் தயாரிக்கப்படுகிறது. இந்த கசாயத்தை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் பருக வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 15-20 மில்லியும், ெபரியவர்கள் 50-60 மிலியும் கொடுக்கலாம்.இந்நிலையில் கடந்த 24ம் தேதி முதல் அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை சார்பில் தினமும் கபசுரகுடிநீர் கீழ்ப்பாக்கம் மற்றும் ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிக்சை பெற்று வருபவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதன்பிறகு அரசு எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை. டெங்கு காய்ச்சலின்போது நிலவேம்பு கசாயம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருந்ததோ? அதைப்போன்று கொரோனா வைரஸ்க்கும் கபசுரகுடிநீர் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நிலவேம்பு கசாயம் வழங்கியதை போன்று கபசுரகுடிநீரை பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்க அரசு பரிந்துரைக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது,  பொது மக்களை நோயில் இருந்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Related Stories: