கடந்த 2 மாதங்களில் வெளிநாட்டில் இருந்து வந்த 15 லட்சம் பேரை கண்காணிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2 மாதத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த 15 லட்சம் விமான பயணிகளை கண்காணிக்கும் பணியை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரானோ வைரஸ் பரவுதல் தீவிரமானதைத் தொடர்ந்து, கடந்த 2 மாதத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த விமான பயணிகள் அனைவரையும் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில்,  அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்களாக உள்ளனர். கடந்த ஜனவரி 18ம் தேதி முதல் வெளிநாட்டிலிருந்து வந்த அனைவரையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து மார்ச் 23ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 15 லட்சம் பயணிகள் வந்திருப்பதாக குடியேற்ற துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால், மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கண்காணிக்கும் விமான பயணிகள் எண்ணிக்கைக்கும், குடியேற்றத் துறை அளித்துள்ள தகவல்களுக்கும் இடையே இடைவெளி உள்ளது. இது, வைரசை கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளை தீவிரமாக பாதிக்கக் கூடும். எனவே, கடந்த 2 மாதத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த 15 லட்சம் பயணிகளை கண்காணிக்கும் நடவடிக்கை மாநில அரசுகள் உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும். நோய் தொற்று பரவாமல் தடுக்க அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பது அவசியம்.

எனவே, சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, இப்பணியை மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து தலைமைச் செயலர்கள் முழு கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இலங்கையில் தவிக்கும் 2 ஆயிரம் இந்தியர்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் 104 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 200 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், இந்நாட்டுக்கு சுற்றுலா சென்ற 16,900 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களில் 2,439 பேர் இந்தியாவில் இருந்து சென்றவர்கள். மேலும், 2,167 சீனப் பயணிகளும் சிக்கியுள்ளனர்.

‘வெளி மாநில மக்களை வெளியேற்ற வேண்டாம்’

நாடு முழுவதும் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். 21 நாள் முடக்கத்தால், அவர்கள் வேலையின்றி முடங்கி கிடக்கின்றனர். அவர்களால் சொந்த மாநிலங்களுக்கும் திரும்ப முடியவில்லை. சில மாநிலங்களில் இவர்கள்  விரட்டப்படுகின்றனர். இந்நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைக்கசம் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், ‘கொரோனா வேகமாக பரவும் இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்களை ஒட்டு மொத்தமாக வெளியேற்ற வேண்டாம். அவர்களை ஓட்டல்கள், வாடகை கட்டிடங்கள், பெண்கள் விடுகள் ஆகியவற்றில் தங்க வைத்து தேவையான உணவு அளித்து, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்,’ என கேட்டுக் கொண்டுள்ளது.

சார்க் நாடுகளுக்கு இந்தியா ஆலோசனை

சார்க் அமைப்பில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை உள்ளன. கொரோனா வைரஸ் பிரச்னை குறித்து, இந்த நாடுகள் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தலாம் என இந்தியா கடந்த 15ம் தேதி கூறியிருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், கொரோனாவை எதிர்த்து போராட சார்க் நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் மோடி ஆலோசனை வழங்கினார். இந்நிலையில், ெகாரோனா வைரஸ் பற்றிய புதிய தகவல்கள், விஷயங்கள், சிகிச்சை முறைகளை சார்க் நாடுகள் ஆன்லைன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம் என இந்தியா கூறியுள்ளது. மேலும், இது செயல்பாட்டுக்கு வரும்வரை, சார்க் நாடுகளின் சுகாதாரத்துறை நிபுணர்கள் இ-மெயில், வாட்ஸ் ஆப் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

நமது நோய் எதிர்ப்பு சக்தி இதை எதிர்த்துப் போராட முடியுமா?

விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். உலகளவில் 1,00,000 பேர் மீண்டது குறித்த தகவல்கள் பதிவாகியுள்ளன, பெரும்பாலானவை சிகிச்சையின்றி குணமாகியுள்ளனர். சில ஆய்வுகள் 20% மட்டுமே கடுமையாக நோய்வாய்ப்பட்டதாக கூறுகின்றன, சார்ஸ்-கோவி -2 க்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது. இது அதன் வைரஸ் குடும்பத்தில் மற்றவற்றிலிருந்து வேறுபட்டது.

புரதங்களின் வரிசை மற்றும் வடிவமைப்பு, சார்ஸ்-கோவி மற்றும் சார்ஸ்-கோவ் -2 க்கு இடையில் ஒரே மாதிரியாக இருந்தாலும், சார்ஸ்-கோவின் ஸ்பைக் புரதத்திற்கு எதிரான ஆன்டிபாடிகள் சார்ஸ்-கோவ் -2 புரதத்துடன் பிணைக்கப்படவில்லை. அதனால்தான் இந்த வைரஸ் மனித உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிவது உலகெங்கிலும் உள்ள ஆய்வகங்களில் நடைபெறும் புரத-ஆய்வியல் முயற்சிகளுக்கு  இன்றியமையாததாக உள்ளது.

கைகளை கழுவ மறக்க வேண்டாம்

ஒவ்வொரு வைரஸ் துகள்களும் கொழுப்பு லிப்பிட் மூலக்கூறுகளின் கோளத்தால் சூழப்பட்டுள்ளன, அவை சோப்பால் எளிதில் அழிந்து போகின்றன. எனவே கைகளை 20 விநாடிகள் வரை தவறாமல் கழுவ வேண்டும். இந்த லிப்பிட் என்கேசிங்ஸ் நம் உடலுக்கு வெளியே தங்காது: சமீபத்திய ஆய்வில், இந்த வைரஸ்கள் அட்டைப் பெட்டிகளில் ஒரு நாளுக்கு மேல் தங்காது.  அதேபோன்று, இரும்பு / பிளாஸ்டிக்கில் சுமார் 2-3 நாட்கள் வரை  உயிர்வாழும் என கண்டறியப்பட்டுள்ளது.

பல ஆண்டுகால ஆய்வு

ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு முன்னர், நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வைரஸின் 3 டி படத்தை உருவாக்கினர். உயிரியல் மாதிரியின் 2 டி படங்களின் வரிசையை பதிவு செய்ய எலக்ட்ரான் நுண்ணோக்கியைப் பயன்படுத்தினர். இந்த படங்கள் பின்னர் முப்பரிமாண (டோமோகிராபிக்) வகையில் உருவாக்க பயன்படுத்தப்பட்டன.

Related Stories: