கொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை கைதிகள் குடும்பத்தினருடன் பேச வாட்ஸ்அப் வீடியோ கான்பரன்சிங்: தமிழக சிறைகளில் சிறப்பு ஏற்பாடு

சேலம்: தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் உறவினர்களை சந்திக்க முடியாத நிலையில்  வாட்ஸ்அப் வீடியோ கான்பரன்சிங் மூலம் பார்த்து பேச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோரோனா வைரஸ் பரவி வருவதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சிறை கைதிகளை அவர்களின் உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய சிறைகள் உள்பட 138 சிறையிலும் உடனடியாக இந்த தடை அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையில் சிறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்கும் சுமார் 1000 கைதிகள் இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் சிறையில் உள்ள கைதிகள் குடும்பத்தினரை சந்திக்காததால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்களோ? என அவர்கள் அச்சத்திற்கு ஆளாகினர். இதையடுத்து கைதிகள் அவர்களின் குடும்பத்தினருடன் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் பேசும் வசதியை சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

கைதிகளிடம் அவர்களின் குடும்பத்தினரின் செல்போன் எண் இருக்கிறது. அவர்களின் வாட்ஸ்அப் நம்பருடன் சிறையில் உள்ள செல்போனுக்கு அழைக்கப்படுவார்கள். பின்னர் வீடியோ கான்பரன்சிங் அறையில் உள்ள பெரிய திரையில் இணைப்பு கொடுத்து, குடும்பத்தினருடன் பேசுவார்கள். இந்த திட்டம் நேற்று தமிழக மத்திய சிறைகளில் அமலுக்கு வந்தது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சிறையில் இருக்கும் கைதிகள் குடும்பத்தினரை பார்க்க முடியாமல் தவித்தனர். இதையடுத்து தற்போது வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் பேச வைக்கிறோம். அவர்களை வீடியோ கான்பரன்சிங் அறைக்கு அழைத்து சென்று பேச வைக்கிறோம். நேரில் சந்தித்தால் கூட குடும்பத்தினர் அனைவரிடமும் நன்றாக பேச முடியாது. ஆனால் வீடியோ கான்பரன்சிங் வசதியால் கைதிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்’’ என்றனர்.

Related Stories: