கடுமையான கட்டுப்பாடு, ஊரடங்கால் சமூக வைரஸ் தொற்று இல்லை: மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: ‘கடுமையான ஊரடங்கு உத்தரவால், இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறவில்லை,’ என மத்திய சுகாதார அமைச்சகம்  அறிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் பரவுவதில் 4 கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கும், 2வது  கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும் வைரஸ் பரவுகிறது. மூன்றாவது கட்டம்தான் சமூகத் தொற்று  கட்டம். இதில், சமூக தொடர்பு மூலமாக வைரஸ் பரவத் தொடங்கும். வெளிநாடு செல்லாதவர்கள், வெளிநாடு சென்றவர்களோடு எந்த தொடர்பும்  இல்லாதவர்களுக்கும் சமூக தொற்றாக வைரஸ் பரவும். மிகவும் அபாயகரமான இந்த கட்டத்தில்தான் இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் உள்ளன.

நான்காவது கட்டம் என்பது நாடு முழுவதும் பரவலாக வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையைக் குறிக்கும். இதில் இந்தியா மூன்றாவது கட்டத்தை எட்டி  விட்டதா? இல்லையா? என்பதில் சர்ச்சை நிலவுகிறது. ஆனால், கொரோனா சமூகத் தொற்றாக மாறிவிட்டது என்பதற்கு இதுவரை ஆதாரமில்லை என  மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் நேற்று கூறினார்.  இது தொடர்பாக நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவில் கொரோனா  வைரஸ் சமூக தொற்றாக மாறியதற்கான எந்த வலுவான ஆதாரமும் இல்லை. கொசுக்களால் இந்த வைரஸ் நிச்சயம் பரவாது. நாடு தழுவிய  ஊரடங்கால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும். நாம் 100 சதவீதம் சமூக தனித்திருத்தலை கடைபிடித்தால், சமூக தொற்றின் சங்கிலி தொடரை  துண்டித்து வைரஸ் பரவுதலை தடுக்கலாம்,’’ என்றார்.

மேலும், 17 மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யேக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.  இதற்கிடையே 2ம் நாள் ஊரடங்கால் நேற்றும் நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைத்த  போதிலும், வெளிமாநில கூலி தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தினக்கூலியை மட்டுமே நம்பி இருக்கும் அவர்கள்  இருப்பிடமின்றி, உணவின்றி 2ம் நாள் ஊரடங்கிலேயே பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிறையில் இருப்பதை விட கொடுமையான கட்டத்தில்  நிர்கதியாய் இருப்பதாக டெல்லியில் உள்ள வெவ்வேறு மாநில தொழிலாளர்கள் புலம்புகின்றனர். மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில்,  வேறு சில மாநிலங்களில் தங்கியுள்ள தங்கள் தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன. ஊரடங்கை மீறி அவசியமின்றி வெளியில் நடமாடியது  தொடர்பாக நாடு முழுவதும் நேற்றும் நூற்றுக்கணக்கானோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், நேற்று 90க்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு  உள்ளது. நேற்று முன்தினம் வரை நாடு முழுவதும் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 606 ஆக இருந்த நிலையில், நேற்று 697 ஆக அதிகரித்தது.  இதில், 47 பேர் வெளிநாட்டினர். 45 பேர் குணமடைந்து உள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி  இருக்கிறது.  கேரளாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 118 ஆக உள்ளது. நேற்று 4 பேர் இறந்த நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக  உயர்ந்துள்ளது.

கட்டுப்பாடு தளர்த்தப்படாது

நாடு முழுவதும் ஊரடங்கில் எந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படாது என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. வைரஸ் அறிகுறியுடன்  தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூக தனித்திருத்தலை உறுதி செய்ய  வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் வேண்டிய அளவுக்கு இருப்பு இருப்பதால் மக்கள் அவற்றை வாங்க கடைகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்ல  வேண்டாம் என அரசு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி உள்ளது.

கொரோனா வார்டு ரயில் பெட்டிகள்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக, ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை  அளிக்க தேவையான கூடுதல் மருத்துவ வசதிகளை முன்கூட்டி செய்வதில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையே, கொரோனா  தடுப்பு பணிகளுக்காக ரயில்வே நிர்வாகத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல்  தலைமையில் உயர்மட்ட கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், வைரஸ் அறிகுறியுடன் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டாகவும்,  அவசரகால சிகிச்சைக்கான மையங்களாவும் ரயில் பெட்டிகளை பயன்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மலிவு விலையில் வென்டிலேட்டர்: கான்பூர் ஐஐடி மாணவர்கள் சாதனை

கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு அதிகளவில் இருக்கும் என்பதால், செயற்கை சுவாசம் தர பயன்படுத்தும் வென்டிலேட்டர்  மருத்துவ கருவியின் தேவை தற்போது அதிகரித்துள்ளது. தற்போது சந்தையில் இக்கருவி ரூ.4 லட்சம் வரை விற்கப்படும் நிலையில், வெறும் ரூ.70  ஆயிரத்தில் சிறிய ரக வென்டிலேட்டர் கருவியை தயாரித்து ஐஐடி கான்பூர் மாணவர்கள் நிகில் குருல், ஹர்சித் ரத்தோர் ஆகியோர் சாதித்துள்ளனர்.  இதில் பயன்படுத்தப்பட்டுள்ள  அனைத்து பொருட்களும் உள்நாட்டை சேர்ந்தவை. இதில் ஆக்ஸிஜன் சிலிண்டரை இணைத்து பயன்படுத்தும் வசதிகள்  உள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் 1000 மலிவு விலை வென்டிலேட்டர்களை தயாரிக்க 9 பேர் கொண்ட குழுவை ஐஐடி கான்பூர் நிர்வாகம்  அமைத்துள்ளது.

போதுமான நிதியுதவி

மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.1.7 லட்சம் கோடிக்கான நிதியுதவி பற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்த சோதனை  காலத்தை சமாளிக்க ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கப் பெறுவதே எங்களின் உறுதியான  நோக்கம். பிரதான் மந்திரி கரீப் கல்யாண் நிதி உதவி ஏழைகளின் உணவு மற்றும் வாழ்வாதார பாதுகாப்புக்கு  போதுமானதாக இருக்கும்,’ என்று  கூறியுள்ளார்.

Related Stories: