தோவாளை மலர் சந்தை மூடல்; பணகுடி பகுதியில் செடியிலேயே கருகும் பூக்கள்: விவசாயிகள் குமுறல்

பணகுடி: கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. இதனால் வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பொதுமக்களை வீடுகளிலேயே இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் உள்ள காவல்கிணறு, ஆவரைகுளம், தளவாய்புரம், லெப்பைகுடியிருப்பு, ரோஸ்மியாபுரம், நதிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல ஏக்கரில் பூ சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் விளையும் பூக்களை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம்.

தற்போது 144 தடை காரணமாக தோவாளை மலர் சந்தை உள்ளிட்ட அனைத்து சந்தைகளும் மூடப்பட்டன. இன்னும் ஒரு வாரத்தில் கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் கோயில் திருவிழாக்கள் தொடங்க உள்ள நிலையில் கொரோனா வைரஸ் எதிரொலி, தடை உத்தரவால் விவசாயிகள் பல ஏக்கரில் சாகுபடி செய்து பூக்களை பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் பூக்கள் செடிகளிலேயே கருகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மலர் சாகுபடி செய்துள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு விரக்தியின் உச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பணகுடி நதிப்பாறை பகுதியைச் சேர்ந்த விவசாயம் செய்துவரும் பி.காம் பட்டதாரியான லெபின் கூறுகையில், நாங்கள் வருடாவருடம் மாசி, பங்குனி மாதத்தை கணக்கிட்டு கேந்தி பூக்களை பயிரிட்டு சுமார் 120 நாட்கள் கண்ணும் கருத்துமாய் பார்த்து அறுவடை செய்வது வழக்கம். தற்போது சுமார் 5 ஏக்கரில் பயிரிட்டுள்ேளாம். ஏக்கருக்கு 1 லட்சம் என 5 லட்சத்திற்கும் மேலாக செலவழித்த நிலையில் தற்போது 144 தடை உத்தரவால் பூக்களை பறித்தும் பறிக்காமலும் அப்படியே தோட்டத்திலேயே விட்டு விட்டோம். உழைப்பிற்கு கூட பயனில்லாமல் போய்விட்டது.

பங்குனி மாதம் திருவிழாவை நம்பி பயிரிட்டு தற்போது செடியிலேயே கருகி வருவதை பார்க்ககூட முடியாத நிலை உள்ளதென கவலையோடு தெரிவித்தார். இதேபோல காவல்கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள பூ விவசாயத்தை நம்பியுள்ள ஏராளமானோர் கடன் பிரச்னையில் சிக்கியுள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் எதிரொலி தொடர்பாக பல்வேறு சலுகைகள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு மற்றும் நெல்லை மாவட்ட கலெக்டர் இது தொடர்பாக அரசுடன் விவசாயிகளின் நிலையை எடுத்து கூறி நஷ்டத்தை ஈடுகட்ட முன்வர வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: