4வது முறையாக ம.பி. முதல்வரானார் சிவராஜ் சிங் சவுகான்

போபால்: மத்தியப் பிரதேச மாநில முதல்வராக 4வது முறையாக சிவராஜ் சிங் சவுகான் நேற்று இரவு பதவியேற்றார். உலகை அச்சுற்றுத்தும் கொரோனா தற்போது ஒருபுறம் இந்தியாவில் பரவி உள்ள நிலையில், மத்தியப் பிரதேச அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு துணை முதல்வராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு முதல்வர் கமல்நாத்துக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்தது.  இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த ஜோதிராதித்யா சிந்தியா அடுத்த சில தினங்களில் பாஜ தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து, ஜோதிராதித்யா ஆதரவு எம்எல்ஏ.க்கள் 22 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கர்நாடகாவில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜ குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

இதற்கிடையே, முதலில் 6 பேரது ராஜினாமாவை மட்டும் முதலில் ஏற்றுக் கொண்ட சபாநாயகர், பின்னர் 16 எம்எல்ஏ.க்கள் ராஜினாமாவையும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து கமல்நாத் தலைமையிலான ஆட்சி பெரும்பான்மை இழந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் காலக்கெடு கோரியபோது அதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் 20ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த கமல்நாத் அதற்கு முன்தினம் இரவு அவரது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஏற்கனவே மூன்று முறை முதல்வராக இருந்த மாநில பாஜ தலைவர் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக நியமிக்கப்படுவார் என்று தெரிய வந்தது. ஆனால் அவர் முதல்வராவதற்கு கட்சியில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாஜ எம்எல்ஏ.க்கள் கூட்டம் மத்திய பாஜ கண்காணிப்பாளர்கள் அருண் சிங், வினய் சகஸ்ரபுத்தே தலைமையில் காணொளி காட்சி மூலம் நேற்று நடத்தப்பட்டது.  இதில் பல எதிர்ப்புகளையும் தடைகளையும் மீறி சிவராஜ் சிங் சவுகான் சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து நேற்று இரவு சிவராஜ் சிங் சவுகான் மத்தியப் பிரதேச முதல்வராக நான்காவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் பதவி பிரமாணமும் ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

Related Stories: