பெரும் இழப்பில் தவிக்கும் ஏற்றுமதி நிறுவனங்கள்: சக்திவேல், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர்

தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பை வாரி வழங்கும் நகரமாக திருப்பூர் விளங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பின்னலாடைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்பட்டு நம் நாட்டுக்கு பெருமளவு அந்நிய செலாவணி ஈட்டித்தரப்படுகிறது. இங்குள்ள ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் மூலமாக சுமார் 8 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.  தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக எங்களது பின்னலாடை நிறுவனங்கள் சார்பில் அடுத்த 3 மாதங்களுக்கு பொருட்களை அனுப்ப வேண்டாம் என்று எங்களிடம் பொருட்களை வாங்கும் நிறுவனங்கள் தெரிவித்து விட்டது. சிலர் பொருட்களை வாங்குவதை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளனர். இதனால், தற்போதைய சூழலில் திருப்பூரில் நிலைமை மோசமாக தான் உள்ளது.

 இந்த நிலை தொடர்ந்தால், ெதாழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும். நாங்கள் செய்து வைத்த பொருட்களை அனுப்ப முடியாத நிலை தொடர்ந்தால் நாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக, நாங்கள் ஒரு மாதம் வட்டி கட்டா விட்டால் 3 மடங்கு அபராதம் வசூலிக்கின்றனர். எனவே நாங்கள் மத்திய அரசிடம் கேட்டு கொண்டது என்னவென்றால் வாங்கிய கடனுக்கு வட்டி கொடுப்பதில் விலக்கு அளிக்க வேண்டும். பல சிறிய நிறுவனங்கள் இதனால் பெரும் ஆபத்தில் உள்ளன. வேலை இழப்பு ஏற்படும் பட்சத்தில் தொழிலாளர்களுக்கு உத்திரபிரதேசம் அரசு போன்று, பின்னலாடை தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாதம் ஊதியம் கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இஎஸ்ஐ, பிஎப் 6 மாதத்துக்கு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், எங்கள் நிறுவனங்களுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.  திருப்பூரில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு மாதம் ₹2 ஆயிரம் கோடி பின்னலாடை பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தோம். 3 மாதம் பின்னலாடை பொருட்களை அனுப்ப வேண்டாம் என்று வாங்குபவர்கள் கூறினால் 3 மாதத்தில் ₹6 ஆயிரம் கோடி வரை தேங்கி விட வாய்ப்புள்ளது. அவ்வளவு பேர் சொல்ல மாட்டார்கள் என்று கூறினாலும், பாதி பேர் பின்னலாடை பொருட்களை அனுப்ப வேண்டாம் என்று சொன்னால் கூட ₹3 ஆயிரம் கோடி வரை தேங்கி இருக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து பொருட்களை உற்பத்தி செய்யவும் முடியாத நிலை ஏற்படும். இதனால், வேலை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழக அரசு எங்களது பிரச்சனையை கவனத்தில் எடுத்து கொண்டு மத்திய அரசிடமும், ஆர்பிஐ வங்கியிடம் பேச வேண்டும்.

 உபி அரசு போன்று தமிழக அரசு சார்பில், மாத சம்பளம் போன்று ஏதாவது தர வேண்டும். தற்போது நாங்கள் உற்பத்தியை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறோம். இன்று (நேற்று) ஒருநாள் மட்டுமே உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளோம். தொழிற்சாலைகளை ஒட்டு மொத்தமாக நிறுத்தினால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்களின் நலன் கருதி தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டு தான் இருக்கிறோம். தொடர்ந்து தயாரிக்கப்படும் பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்க நிலை ஏற்படும் சூழலில் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும்.

* 3 மாதம் பின்னலாடை பொருட்களை அனுப்ப வேண்டாம் என்று வாங்குபவர்கள் கூறினால் 3 மாதத்தில் ₹6 ஆயிரம் கோடி வரை தேங்கி விட வாய்ப்புள்ளது.

Related Stories: