நாடு முழுவதும் நடந்த ஊரடங்கில் வெறிச்சோடின நகரங்கள்; வீட்டுக்குள் முடங்கினர் மக்கள்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மக்கள் ஊரடங்கு நேற்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. கோடிக்கணக்கான மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர். சாலைகள் எல்லாம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த சுய ஊரடங்குக்கு மதிப்பளித்து வீட்டுக்குள் இருந்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவுகிறது. இதற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டி விட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தியதால், இத்தாலி மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டிவிட்டது.  இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டிவிட்டது. இதனால், இந்த வைரஸ் பரவலை தடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க, நேற்று சுய ஊரடங்கை பின்பற்றும்படி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடந்த 19ம் தேதி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி 14 மணி நேர மக்கள் ஊரடங்கு நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை  கடைப்பிடிக்கப்பட்டது. ஊரடங்கு தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி டிவிட்டரில் விடுத்த  வேண்டுகோளில், ‘இந்த ஊரடங்கில் நாம் அனைவரும் பங்கேற்போம். இது, கொரோனா  வைரஸ் அச்சுறுத்தலுக்கு எதிராக போராட மிகப் பெரிய பலத்தை அளிக்கும்.  வீட்டுக்குள் இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்,’ என வேண்டுகோள் விடுத்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள், பிற மாநில முதல்வர்களும் இந்த சுய ஊரடங்கை மதிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.   

இதனால், நேற்று மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறவில்லை. சாலைகள் எல்லாம் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகளை தவிர, மற்ற கடைகள் எல்லாம் நேற்று மூடப்பட்டிருந்தன. தலைநகர் டெல்லியில் ரோடுகள் வெறிச்சோடியது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டம் இல்லை. காஷ்மீர் மக்கள் பல ஊரடங்கு உத்தரவுகளை சந்தித்ததால், அவர்கள் வழக்கம் போல் நேற்று வீட்டுக்குள் முடங்கினர். எப்போதும் படு பிஸியாக இருக்கும் கொல்கத்தாவின் எஸ்பிளனேடு, டல்ஹவுசி, விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. நாடு முழுவதும் அனைத்து ரயில் சேவைகளும் நேற்று காலை முதல் முடங்கின. வர்த்தக தலைநகரான மும்பையும், நேற்று முற்றிலும் முடங்கியது. மத்தியப் பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

குஜராத்தில் சுய ஊரடங்கு அழைப்புக்கு மக்களிடைய நல்ல வரவேற்பு இருந்தது. யாரும் வீட்டை விட்டு வெளியேறாததால் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், சூரத், வதோதரா மற்றும் ராஜ்கோட் ஆகிய பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.கோவா தேவாலயங்களில் நேற்று பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டன. பிரதமர் மோடி விடுத்த அழைப்புக்கு கட்சி பாகுபாடின்றி, பா.ஜ ஆட்சி நடக்காத மாநிலங்களின் முதல்வர்களும் மக்கள் சுய ஊரடங்கை பின்பற்றி கொரோனா பரவலை தடுக்க உதவும்படி அறிவுறுத்தினர். மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்கள் இந்த மாதம் இறுதி வரை முழு அல்லது பகுதி நேர அடைப்பை அறிவித்துள்ளன. கோ ஏர், இண்டிகோ மற்றும் விஸ்தாரா போன்ற பல தனியார் விமான நிறுவனங்கள் உள்நாட்டு விமான போக்குவரத்தை நேற்று குறைத்தன. அகில இந்திய வர்த்தகர்கள் சங்கமும் இந்த சுய ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததால், அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

Related Stories: