மதுரை: கொரோனா பாதிப்பால் வாழைத்தார் விற்பனை பாதியாக குறைந்துள்ளது. மதுரையில் மாட்டுத்தாவணி பழ மார்க்கெட், சிம்மக்கல், தயிர் மார்க்கெட் மற்றும் ஓபுளா படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் வாழைப்பழ மொத்த வியாபார கடைகள் உள்ளன. இங்கு தேனி, கம்பம், முசிறி, குளித்தலை, தூத்துக்குடி மற்றும் மேலூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து செவ்வாழை, பூவன், நாட்டுப்பழம், ரஸ்தாலி, பச்சைப்பழம் மற்றும் நேந்திரம் உள்ளிட்ட பல வகையான வாழைப்பழங்கள் மொத்தமாக வரும். சராசரியாக தினசரி 800 முதல் 900 லோடு வரை வரத்து இருக்கும். இவற்றின் மூலம் மட்டும் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடக்கும். மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மதுரைக்கு வந்து வாழைத்தார் வாங்கி செல்வது வழக்கம். தற்போது கொரோனா பாதிப்பால் தென்மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மதுரை வருவது பாதிக்கும் மேல் குறைந்துள்ளது.