செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது. செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் கொரோனோ விழிப்புணர்வு முகாம் நடந்தது. செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு மாஸ்க், கையுறைகள் இலவசமாக  வழங்கினார். மேலும், அனைவரும் பயணத்தை தவிர்த்து  இன்று ஒருநாள் வீட்டை விட்டு வெளியே வராமல் குழந்தைகளோடு, பொழுதை கழிக்கவேண்டும் என அறிவிறுத்தினார். செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன். அறக்கட்டளை நிர்வாகிகள் அரவிந்த், பாண்டியன், வினோத், சுரேஷ், டேனியல் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோன்று செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு ஆர்டிஒ செல்வம், நகர் நல அலுவலர் சித்திரசேனா ஆகியோர் தலைமையில் பயணிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் கைகளில் கிருமி நாசினி தெளித்து, நன்றாக சுத்தப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாமை திருப்போரூர் பஸ் நிலையத்தில் நடத்தியது. பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம், கையுறை ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்கள், பயணிகளுக்கு சுகாதாரத்துடன் கை கழுவும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

பின்னர் பஸ் இருக்கைகள், கைப்பிடிகள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பஸ் நிலைய வளாகத்தை தூய்மைப்படுத்தி, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், பொது மக்களுக்கு வழங்கி, இன்று மக்கள் ஊரடங்கை அமல்படுத்தும் விதமாக ஒரு நாள் முழுவதும் வீட்டிலேயே இருந்து பணிகளை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் காவல் நிலையம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இன்ஸ்பெக்டர் முனிசேகர் கலந்து கொண்டு பொதுமக்கள், பயணிகள், வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் ஆகியோரிடம் ஊரடங்கு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெரும்புதூர்: கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம் பெரும்புதூர் பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டு, பொது மக்களுக்கு வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் கை கழுவி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதேபோல் பெரும்புதூர் அடுத்த பென்னலூர் சுங்கச்சாவடியில் நடந்த விழிப்புணர்வு முகாமில், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு துண்டு பிரசுங்கள் வழங்கப்பட்டன. மேலும், பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இங்கு காய்ச்சல், சளி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, ஆர்டிஓ திவ்ய, மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் ஜீவா, சுகாதார பணிகள் இணை இயக்குனர் பழனி, பெரும்புதூர் ஏஎஸ்பி கார்திகேயன் ,பெரும்புதூர் தாசில்தார் ரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் நஹீம் பாஷா, பிச்சியம்மாள் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: