சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளும் இன்று முதல் மூடல்; மறு உத்தரவு வரும் வரை பொதுமக்களுக்கு அனுமதியில்லை

சென்னை: சென்னை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளும் மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், நகைக்கடைகள், சுற்றுலா தலங்கள், மதுபான பார் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி அடிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடியும் நாளை ஒருநாள் மக்கள் ஊரடங்கு அறிவித்துள்ளார்.

அதன்படி பொதுமக்கள் நாளை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கடைகள், அலுவலகங்கள், பஸ், ரயில்கள் இயங்காது என்று கூறப்பட்டுள்ளது. இந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆராதனைகள் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளும் இன்று முதல் மூடப்படுவதாகவும், மறு உத்தரவு வரும் வரை பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

புதுச்சேரி கடற்கரை மூடல்

புதுச்சேரி கடற்கரை மூடப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை புதுச்சேரி கடற்கரை மூடப்பட்டு இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: