நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் மபி முதல்வர் கமல்நாத் ராஜினாமா: மீண்டும் ஆட்சி அமைக்கிறது பா.ஜ

போபால்: மத்தியப் பிரதேசத்தில் நம்பிக்கை வாக்ெகடுப்பை நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை சந்திக்கும் முன்பாகவே முதல்வர் கமல்நாத் ராஜினாமா செய்தார். இதையடுத்து, இம்மாநிலத்தில் நடந்த 15 மாத காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. புதிய ஆட்சியை அமைக்கும் முயற்சியில் பாஜ இறங்கியுள்ளது.  மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. இக்கட்சியில் செல்வாக்குமிக்க இளம் தலைவராக விளங்கிய ஜோதிராதித்யா சிந்தியா, திடீரென அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.வில் சேர்ந்தார். அவரது ஆதரவாளர்களாக இருந்த 6 அமைச்சர்கள், 16  எம்எல்.ஏ.க்கள் என மொத்தம் 22 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.  இதனால், சட்டப்பேரவையில் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்தது. எனவே,  சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் இருமுறை உத்தரவிட்டார்.

ஆனால், பெங்களூரில் பாஜ.வின் பிடியில் இருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை விடுவிக்காத வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த மாட்டேன் என கமல்நாத் கூறி விட்டார். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்காக கூட்டப்பட்ட சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தையும் கொரோனா வைரஸ் பதற்றத்தை காரணம் காட்டி, வரும் 26ம் தேதிக்கு சபாநாயகர் பிரஜாபதி ஒத்திவைத்தார். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி சபாநாயகருக்கும், முதல்வர் கமல்நாத்துக்கும் உத்தர விடக்கோரி மத்திய பிரதேச முன்னாள் பாஜ முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பளித்த நீதிபதிகள், நேற்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்கும்படி ம.பி சபாநாயகருக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், 16 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் நேற்று முன்தினம் இரவு ஏற்றுக் கொண்டார்.  இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏ.க்களின் பலம் 92 ஆக குறைந்தது.

இந்த பரபரப்புக்கு இடையே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நேற்று விறுவிறுப்பாக நடந்தன. ஆனால், பகல் 12 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்நாத், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக  அறிவித்தார். அதன்படியே, நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே தனது முதல்வர் பதவியை கமல்நாத் ராஜினாமா செய்தார். ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் அவர் வழங்கிய ராஜினாமா கடிதத்தில், ‘எனது 40 ஆண்டுகால பொதுவாழ்வில், நான் தூய்மையான அரசியலையும், ஜனநாயக நெறிமுறைகளையும் பின்பற்றினேன். ஆனால், கடந்த 2 வாரங்களாக ஜனநாயக மதிப்புகள் சீர்குலைந்தது தெளிவாக தெரிந்தது. புதிய முதல்வருக்கு வாழ்த்துக்கள். மாநிலத்தின் வளர்ச்சிக்கு நான் தொடர்ந்து உதவுவேன்,’ என குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை, ஆளுநர் லால்ஜி டாண்டன் ஏற்றுக்கொண்டார்.

இதன் மூலம், மத்திய பிரதேசத்தில் 15 மாதமாக நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, புதிய ஆட்சியை அமைக்கும் நடவடிக்கையில் பாஜ உடனடியாக இறங்கியது. புதிய முதல்வரை பா.ஜ எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்யும் கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், நரோட்டம் மிஸ்ரோ ஆகியோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு அடிப்படுகிறது.

ஜனநாயக மதிப்புகளை பா.ஜ கொன்று விட்டது:

ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் அளிக்கும் முன் கமல்நாத் அளித்த பேட்டியில், ‘‘நான் ராஜினாமா செய்ய முடிவு செய்து விட்டேன். மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். எனது 15 மாத காலத்தில், மக்களுக்காக செய்த பணிகள் பாஜ.வுக்கு பிடிக்கவில்லை. எனக்கு எதிராக தொடர்ந்து சதி செய்தது. 22 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் பெங்களூரில் சிறை பிடிக்கப்பட்டு  இருப்பதை இந்த நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. தற்போதைய அரசியல் குழப்பத்துக்கு ஜோதிராதித்யா சிந்தியாதான் காரணம். அவருடன் பாஜ கூட்டு சேர்ந்த எனது அரசையும், ஜனநாயகத்தையும் கொன்று விட்டது,’’ என்றார்.

ருசி கண்ட பூனை

 கமல்நாத் அமைச்சரவையில் சுயேச்சை எம்எல்ஏ பிரதீப் ஜெய்ஸவால், சுரங்கத்துறை அமைச்சராக இருந்தார். அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கமல்நாத் அரசு ஆட்சியில் இருக்கும் வரை நான் ஆதரவு அளிப்பேன் என ஏற்கனவே கூறியிருந்தேன். இப்போது எனக்கு வேறு வழியில்லை. எனது தொகுதி வளர்ச்சியை உறுதி செய்ய, நான் புதிய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பேன்,’’ என்றார்.

அதிருப்தி எம்எல்ஏ.வின் மகள் திடீர் தற்கொலை:

மத்திய பிரதேசத்தில் பாஜ.வுக்கு ஆதரவாக ராஜினாமா செய்த 22 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களில் சுரேஷ் தக்த்தும் ஒருவர். இவரது மகள் ஜோதி (24). இவரது கணவர் ராஜஸ்தானில் பரன் மாவட்டத்தில் அரசு டாக்டராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளது. இந்நிலையில் ஜோதி, தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்னை காரணமாக இவர் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. இது குறித்து விசாரணை நடக்கிறது.

5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 15 மாதங்களாக இருந்த காங்கிரஸ் ஆட்சி கவிழந்துள்ளது. இதனால், தற்போது பஞ்சாப், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. மத்தியப் பிரதேசத்தை பறி கொடுத்ததால், தற்போது 5 மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் நிலவுகிறது.

மறுதேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு:

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக நேற்று மதியம் 2 மணியளவில் சட்டப்பேரவை கூடியது. ஆனால், பா.ஜ எம்எல்ஏ.க்கள் மட்டுமே அவைக்கு வந்திருந்தனர். காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் யாரும் வரவில்லை. அப்போது பேசிய சபாநாயகர், ‘‘உச்ச நீமன்ற உத்தரவுப்படி அவை கூட்டப்பட்டு உள்ளது. ஆனால், முதல்வர் கமல்நாத் ராஜினாமா செய்துள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதில் அர்த்தம் இல்லை. எனவே, அவையை காலவரையின்றி ஒத்திவைக்கிறேன்,’’ என்று அறிவித்தார்.

Related Stories: