இந்தியாவில் 5 பேரை பலி வாங்கிய கொரோனா வைரஸ்: ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழப்பு!

ஜெய்ப்பூர்: இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக இருந்த நிலையில், தற்போது அது 5 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இத்தாலி நாட்டை சேர்ந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2ம் தேதி இத்தாலியை சேர்ந்த ஆண்ரி சார்லி என்ற ( 69 ) வயது முதியவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் கொரோனா அறிகுறியோடு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அடிப்படையான சிகிச்சை அளித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர், தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மனைவிக்கும் கொரோனா இருப்பதும் அவர், தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்திருக்கிறது. 4 இந்திய குடிமக்கள் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் உயிரிழந்திருக்கிறார். இதனிடையே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 14 ஆயிரத்து 376 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories: