‘டிக்டாக்’ பழக்கத்தால் விபரீதம்: பெண் கழுத்தை நெரித்து கொலை

திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ளது ஹார்விபட்டி. இங்குள்ள எஸ்.ஆர்.வி.நகர், ரோஜா தெருவை சேர்ந்தவர் அசோக் (32). இவரது மனைவி சுதா (27). எட்டு வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்த அசோக், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், சுதா வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் திருநகர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், சுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் அசோக் தலைமறைவாக உள்ளதால் அவரை தேடி வருகின்றனர். அசோக் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டு, மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பியோடி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அசோக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விசாரணை குறித்து போலீசார் கூறுகையில், ‘‘கொலையான சுதா, டிக்டாக்கில் வீடியோ பதிவிடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒராண்டுக்கு முன்பும், மீண்டும் 2 மாதங்களுக்கு முன்பும் சுதா திடீரென மாயமானதாக திருநகர் போலீஸ் ஸ்டேஷனில் கணவர் அசோக் புகார் அளித்திருந்தார். இருமுறையும் சுதாவை தேடிக்கண்டுபிடித்து போலீசார் அசோக்கிடம் ஒப்படைத்துள்ளனர். டிக்டாக் மூலம் ஆண் நண்பர்களுடன் பழகி வந்தது, அசோக்கிற்கு பிடிக்காததால், மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரிடையே வாக்குவாதமும் நடந்திருக்கிறது. மனைவி மீதான கோபத்தில் 2 நாட்களுக்கு முன்புதான் தனது மகன், மகள் இருவரையும், மனைவியுடன் இருக்க வேண்டாம் எனக்கூறி, தன் பெற்றோர் வீட்டிற்கு அசோக் அழைத்து சென்று விட்டு வந்துள்ளார். இந்நிலையில்தான் மனைவி மீதான சந்தேகத்தில் அசோக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றிருக்கலாம்’’ என தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் அருகே டிக்டாக் விவகாரத்தில், இளம்பெண் கழுத்து நெரித்து கொலையான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: