200 மீட்டரை கடக்க 3 கி.மீ. சுற்றும் அவலம்: வேப்பலோடையில் கண்மாய் தண்ணீரில் இறங்கி வயலுக்குச் செல்லும் பெண்கள்

குளத்தூர்: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு உட்பட்டது வேப்பலோடை. கடலோரம் அமைந்துள்ள இக்கிராமத்தில் சுமார் 3,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம், உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 80 சதவிகிதத்திற்கு மேலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்த  கிராமத்தின் மேற்கு பகுதி கண்மாயை அடுத்தே இவர்களது மானாவாரி விளை நிலங்கள் உள்ளன. சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட  மானாவாரி நிலங்களில் கம்பு, சோளம், மிளகாய், உளுந்து சாகுபடி நடந்து வருகிறது.

பருவமழை துவங்குவதற்கு முன்பு கண்மாயில் தண்ணீர் இல்லாத காலத்தில் மாட்டுவண்டி, டிராக்டர் கண்மாய் வழியாக சென்று விவசாயிகள் உழவுப்பணிகளை துவங்குகின்றனர். பின்னர்  பருவமழையால் பெருக்கெடுக்கும் தண்ணீரால் கண்மாய் நிரம்பும் போது பாலம் வசதியின்றி விளை நிலங்களுக்கு செல்ல வேப்பலோடை, வெங்கடாசலபுரம் செல்லும் வழியாக சுமார் 3 கி.மீ. சுற்றி செல்லும் அவலம் நிலவுகிறது.

அதே வேளையில் கண்மாயில் தண்ணீர் சிறிது குறைவாக உள்ள காலத்தில் களை எடுத்தல், மிளகாய் பறித்தல், உளுந்து எடுத்தல் உள்ளிட்ட விவசாய பணிகளுக்காக  கண்மாய் தண்ணீரில் இறங்கி ஆபத்தை உணராமல் செல்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘கண்மாய் அடுத்துள்ள  எங்களது மானாவாரி நிலங்களில் மிளகாய், உளுந்து அதிக அளவில் சாகுபடி செய்து வருகிறோம். பருவமழைக்கு முன்பாக தண்ணீர் இல்லாத கண்மாயை கடந்து விவசாயப் பணிகளை எளிதாக துவக்கி விடுகிறோம். ஆனால், பருவமழை காலத்தில் பெருக்கெடுக்கும் தண்ணீரால் கண்மாய் நிரம்பும்போது கண்மாயை கடக்க பாலம் வசதி இல்லாத காரணத்தால் 3 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்வது பெரும் சிரமமாக உள்ளது. மேலும் இவ்வளவு தொலைவு சுற்றிச்செல்ல வேலையாட்களும் சுணக்கம் காட்டுவதால் விவசாயப் பணிகள் தாமதமாகின்றன.

குறிப்பாக 200 மீட்டர் அளவிலான கண்மாயை கடந்தால் விளை நிலங்கள் உள்ள நிலையில் கண்மாயை கடக்க பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பிரதிநிதிகளிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. எனவே, இனியாவது பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்’’  என்றனர்.

Related Stories: