கொரோனாவால் முடங்கிய ரயில்வே: பயணிகள் வருகை குறைந்ததால் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்ட 168 ரயில்கள் ரத்து

சென்னை: சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியா தற்போது 2வது கட்டத்தில் உள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 169 ஆக  அதிகரித்துள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள தீவிர நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம், கொரோனா வைரஸ் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசும் பொதுமக்கள்  வெளியில் செல்ல வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு கணிசமாக குறைந்துள்ளது. முன்னதாக, திருப்பதி, திருச்சி, ஐதராபாத்,  திருவனந்தபுரம் உட்பட, முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் 85 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மேலும் 168 ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. நாளை 20-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை  ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் முன்பதிவு டிக்கெட்களை ரத்து செய்தால் அபாரத்தொகை வசூலிக்காமல் முழு தொகை திரும்ப அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பயணிகள் தங்கள் ரயில் டிக்கெட்களை ரத்து  செய்தால், 60 ரூபாய் முதல் அபராதம் வசூலிப்பது வழக்கம். ரயில் நிலையங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை கட்டுப்படுத்த பிளாட்பார்ம் டிக்கெட் 10 ரூபாயில் இருந்து ரூ. 50ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

84 விமானங்கள் ரத்து:

சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் 50 சர்வதேச விமானங்கள் மற்றும் 34 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக விமான பயணிகள் வருகை குறைந்ததையடுத்து  விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பயணிகள் தங்கள் முன்பதிவு டிக்கெட்களை ரத்து செய்தால் அபாரத்தொகை வசூலிக்காமல் முழு தொகை திரும்ப அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: