கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்த தாய்லாந்து நாட்டுக்காரர் பலி

கோவை: கோவை அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். தமிழகத்திற்கு தாய்லாந்து நாட்டை சேர்ந்த 8 பேர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுற்றுலா வந்தனர். அவர்கள் ஈரோட்டில் தங்கி மத வழிபாட்டில் ஈடுபட்டனர். இதில், 49 வயது நபருக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை தாய்லாந்து நாட்டிற்கு அனுப்ப முடிவு செய்தனர். இதற்காக, கடந்த 14ம் தேதி ேகாவை விமான நிலையம் சென்றனர்.

அப்போது அவரை பரிசோதனை செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விமான பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. மேலும், உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பினால் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, டயாலிசிஸ் செய்யப்பட்டது. மேலும், பல்வேறு தொற்று நோய்களினால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். எனவே தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக தாய்லாந்து நாட்டில் உள்ள அவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் உடலை நண்பர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மாகே மூதாட்டிக்கு கொரோனா

புதுச்சேரியில் கொரோனா நோய் பாதிப்பு தொடர்பான கண்காணிப்பு  நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன்படி  கோரிமேடு இஎஸ்ஐ  மருத்துவமனைக்கு காய்ச்சல், இருமல், சளி தொல்லையுடன் வந்த ஒரு நோயாளியை அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதித்தனர். அவரின் சளி, ரத்த மாதிரிகள்  எடுக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது. இதற்கிடையே கேரளாவில் கண்ணனூர் மாவட்டத்துக்கு அருகே உள்ள புதுச்சேரி பிராந்தியமான மாகேவில் 68 வயது மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அபுதாபியில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தபோது கொரோனோ அறிகுறிகள் இருந்ததால், அவர் அடையாளம் காணப்பட்டு, தனிமையில் வைக்கப்பட்டிருந்தார். அவரது ரத்த மாதிரியை ஆய்வு செய்ததில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார். மாகே அரசு மருத்துவமனையில் தனிவார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.  முதன்முதலாக புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: