டிடிவி.தினகரனுக்கு விதித்த 31 கோடி அபராத தொகை வசூலிக்க கோரி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: டிடிவி.தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட 31 கோடி அபராத தொகையை வசூலிக்க கோரி தொடர்ந்த வழக்கில் அமலாக்க துறை மற்றும் டிடிவி.தினகரன் பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில்  கூறியிருப்பதாவது: அந்நிய செலாவணி மோசடி செய்ததாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு கடந்த 1998ம் ஆண்டு அமலாக்கத்துறை 31 கோடி அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து டிடிவி.தினகரன் அந்நிய செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த மேல்முறையீடு வாரியம் அமலாக்கதுறை  பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னரும் 31 கோடி அபராத தொகையை டிடிவி.தினகரன் செலுத்தவில்லை. தற்போது அவருக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளது.அவரிடம் அபராத தொகை வசூலிக்க  தற்போது வரை அமலாக்கத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக தகவல் பெறும் ஆணையத்திடம் அபராத தொகை பெறப்பட்டதா  என்பது குறித்து மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. மத்திய பொது தகவல் ஆணையத்திடமும்,  அமலாக்கத்துறையிடமும் மனு அளித்தும் 20 வருடங்களாக அபராத தொகையை பெற எந்த நடவடிக்கையை எடுக்கவில்லை. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, டிடிவி.தினகரனுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை அமலாக்க துறை வசூலிக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் இளையபெருமாள் ஆஜராகி, டிடிவி.தினகரனுக்கு தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில் 1000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. இந்த விவரம் தெரிந்தும் அமலாக்கத்துறை அபராத தொகையை வசூலிக்கவில்லை என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில்  அமலாக்க துறை மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: