குஜராத்தில் 5வது காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா: உடனடியாக சபாநாயகர் ஒப்புதல்

காந்திநகர்: குஜராத்தில் இருந்து 4 மாநிலங்களவை எம்பி.க்களை தேர்வு செய்ய வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டு இடங்களை மட்டுமே வெல்ல முடியும் என்புத தெரிந்தும் பாஜ சார்பில் 3 பேர் போட்டியிடுகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 4 பேர் நேற்று முன்தினம் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தனர். இதுகுறித்து சட்டப்பேரவையில் தெரிவிப்பதாக சபாநாயகர் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ. தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கூறியதாவது:

காகடா தொகுதி பிரவீன் மாரு, அப்டசா தொகுதி பிரதியூமான் சிங் ஜடேஜா, லிம்பிடி தொகுதி சோம கோலி படேல், தாரி தொகுதி காகடியா, தாங் தொகுதி மங்கள் காவித் உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களது ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சி, மாநிலங்களவை தேர்தலில் இரண்டாவது வேட்பாளரை தேர்வு செய்வதில் சிரமங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: