கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: தமிழக சட்டப்பேரவையில் மறுஅறிவிப்பு வரும் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை...சபாநாயகர் தனபால் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல்  செய்தார். இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் 17ம்  தேதி முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. அதன் பிறகு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.  தொடர்ந்து மார்ச் 9ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 9ம் தேதி  சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அன்றைய தினம் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில்  அன்றைய தினம் முழுவதும்  கூட்டம் ஓத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து 11ம் தேதி வனத்துறை, 12ம் தேதி பள்ளி கல்வி துறை, உயர் கல்வி துறை, 13ம் தேதி எரிச்சக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான  மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.14ம் தேதி சனிக்கிழமை, 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பேரவைக்கு விடுமுறை. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை  இன்று கூடியது. பேரவையில் பல்வேறு கேள்விகளுக்கு காரசார விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இதுவரை 107 பேர் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸை தடுப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எங்கு சென்றாலும் சோதனை செய்யப்பட்டு  வருகிறது. அதன்படி, இன்று சட்டப்பேரவையில் பணியாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்திய பின்னர் தான் உள்ளே  அனுமதிக்கப்பட்டனர். சட்டப்பேரவை நுழைவு வாயிலில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தமிழக சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளது.   மறுஅறிவிப்பு வரும் வரை பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

துரைமுருகன் வேண்டுகோள்:

கெரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து உள்ளதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரை முருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். மக்கள் அச்சத்தில் உள்ளனர்;  பிறமாநிலத்தில் உள்ளாட்சித்தேர்தல், சட்டப்பேரவை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. பக்கத்து மாநில முதலமைச்சர்களிடம் ஆலோசனை நடத்தலாம்;  எதிர்க்கட்சிகளை அழைத்துகூட்டம் நடத்தலாம் என்றும் சபாநாயகரிடம் தெரிவித்தார்.  

Related Stories: